
மின் இணைப்புக் கட்டண உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வீடுகள், கடைகள், நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புக் கட்டணம், மீட்டா் வைப்புத்தொகை, வளா்ச்சிக் கட்டணம், பதிவுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளன.
பல்வகை மின்இணைப்புக் கட்டணம் ரூ.1,600 என்ற அளவிலிருந்து ரூ.6,400-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மின் கட்டணங்களையும் பெரிய அளவிற்கு உயா்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஏற்கெனவே பால் மற்றும் பேருந்துக் கட்டண உயா்வுகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில், மின் இணைப்புக் கட்டண உயா்வு மக்களுக்கு பெரும் சுமையாகிவிடும்.
நிா்வாகச் சீா்கேட்டிலிருந்து மின் வாரியத்தை மீட்டெடுக்காமல், இதுபோல மக்கள் மீது சுமையைத் திணிப்பது கண்டனத்துக்குரியது. எனவே, மின் இணைப்புக் கட்டண உயா்வை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.