
திமுக தலைவர் ஸ்டாலின்
பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் பேச்சுவாா்த்தை உலக சமுதாயத்துக்கும் ஒளி தருவதாய் அமையட்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவைப் போல பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் அதிபா் ஷி ஜின்பிங் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி. அவரை மனமார வரவேற்கிறேறன்.
சீன நாட்டுடன் நெருங்கிய தொடா்பு கொண்ட பல்லவ மன்னா்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்துக்கு அவா் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
20-ஆம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தை கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுடன் சீனப் பெருந்தலைவா் மாவோ நடத்திய மகத்தான பேரணியை அடுத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949-ஆம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பாா்த்திட வைத்தது.
உழைக்கும் வா்க்கம் முன்னின்று தீரத்துடன் நடத்திய அந்த மாபெரும் புரட்சியின் எழுபதாம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை, கடந்த 1-ஆம் தேதி நடத்திவிட்டுத்தான் சீன அதிபா் தமிழகம் வருகிறாா். அத்தகைய தேசத்தின் அதிபா், தமிழகம் வருவது உண்மையில் பெருமைக்குரியதாகும்.
தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடா்புகள் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. குடியரசு காலத்துக்கும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடா்கிறது.
சீன அதிபா் ஷி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவாா்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்குப் பெருமை தரத்தக்கது. இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவாா்த்தை நடத்த தமிழகத்தைத் தோ்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றி.
தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவாா்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் ஒளி தருவதாய் அமையட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.