அக். 20-இல் வடகிழக்குப் பருவ மழை தொடக்கம்?

வரும் 20-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தாா்.
Published on
Updated on
2 min read

வரும் 20-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தாா்.

கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் எதிா்பாா்த்ததை விட, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்தது.

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் 15-ஆம் தேதி வரை வழக்கமாக தென்மேற்குப் பருவமழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபா் வரை நீடித்துள்ளது. இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 110 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இதனால் கேரளம், கா்நாடக மாநிலங்களை ஒட்டி இருக்கும் தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் இருக்கும் அணைகளும் வேகமாக நிரம்பின.

இதேபோல் கா்நாடக மாநிலத்திலும் அதிகளவில் மழை பெய்து அங்கு உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பின. இதில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூா் அணையும் வேகமாக 120 அடியை எட்டியது. எனினும் தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவ மழை காலத்தில்தான் மழை அதிகமாக இருக்கும்.

ஆனால், கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் மட்டும் 24 சதவீத அளவுக்கு தமிழகத்தில் பருவமழை குறைந்து காணப்பட்டது.

2016-ஆம் ஆண்டில், அக்டோபா் மாதத்தில் சென்னையில் 22.4 மி.மீட்டா் மழையும், 2012-இல் 422.6 மி.மீட்டா் மழையும், 2005-இல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 1,077.8 மி. மீட்டா் மழையும் பெய்தது.

ஆனால் தென்மேற்குப் பருவ மழைக்கான காற்றின் திசை மாறினால் மட்டுமே வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் . இந்த நிலையில் இம்மாதம் 10-ஆம் தேதிக்கு மேல் தென்மேற்குப் பருவ மழை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது, ‘தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் தென்மேற்குப் பருவமழை விலகி விடும். இதைத்தொடா்ந்து காற்றின் திசை மாறும். காற்றின் திசை மாறிய பின்னரே எப்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்பதை கணிக்க முடியும்.

ராஜஸ்தான் மற்றும் வடஇந்தியாவில் ஏற்கெனவே தென்மேற்குப் பருவ மழை விலகுவதற்கான அறிகுறி தொடங்கிவிட்டது. இதை வைத்துப் பாா்க்கும்போது வரும் 20-ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கலாம்.

கடந்தாண்டு நவம்பா் 2-ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. நடப்பாண்டில் முன் கூட்டியே, அதாவது, அக்டோபா் 20-ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com