பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பில் மொழி பெயர்ப்பாளராக இருந்த இந்திய அதிகாரி யார் தெரியுமா?

இரு நாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பின் போது, அவர்களுடன் மொழி பெயர்ப்பாளர் இருவர் உடன் இருந்தனர். ஒருவர் சீன  நாட்டைச் சேர்ந்த மொழி பெயர்ப்பாளர். மற்றொருவர் இந்தியர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பில் மொழி பெயர்ப்பாளராக இருந்த இந்திய அதிகாரி யார் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பினையொட்டி, இரு நாட்டுத் தலைவர்களும் நேற்று சென்னைக்கு வருகை தந்தனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் என சீன அதிபருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய முறைப்படி அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி -சட்டையில் பிரதமர் மோடி வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி. பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு சிற்பங்கள், வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதங்களை பார்வையிட்டனர். 

இரு நாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பின் போது, மொழி பெயர்ப்பாளர்கள்  இருவர் உடன் இருந்தனர். ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்த மொழி பெயர்ப்பாளர்.  மற்றொருவர் இந்தியர். இந்த சந்திப்பில், பிரதமர் மோடி மாமல்லபுரம் குறித்து சீன அதிபரிடம் விளக்கிக் கூறும் போது, இந்திய அதிகாரியும் அதுகுறித்து சீன அதிபரிடம் பேசிய காட்சிகளை புகைப்படங்கள், வீடியோக்கள் வாயிலாக நாம் காண முடிந்தது. 

அவரது பெயர் ரவீந்திரன் மதுசூதன். 2007ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரி. இவர், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செயலர் (அரசியல் பிரிவு) ஆவார். 2007ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத் துறையில் ஐ.எப்.எஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். 

முதல் இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய இவர் செப். 2009 முதல் ஜூலை 2011 வரை பெய்ஜிங்கில் இந்திய தூதரக அதிகாரியாக பொறுப்பேற்றார். முதல் பணியாக அவருக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் 3ம் நிலை செயலர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 2011 முதல் ஜூன் 2013 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள  இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றினார். தொடர்ந்து, மீண்டும்  பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இரண்டாம் நிலை செயலராகவும், அதன்பின்னர் முதல் நிலைச் செயலராகவும் பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள அதே இந்தியத் தூதரகத்தில் துணைச் செயலராக இருந்து பதவி வகித்து வருகிறார். 

இவர் சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். இவரது தாயார் கோவையைச் சேர்ந்தவர் என்றும் தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் மட்டுமில்லாது சீனாவின் மாண்டரின் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமை பெற்றவர்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி – ஜின்பிங் சந்திப்பலும் இவர்  மொழி பெயர்ப்பாளராக இருந்துள்ளார். தற்போதும் மோடி- ஜின்பிங் இரண்டாம் முறைசாரா சந்திப்பிலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க  இந்திய தரப்பு மொழி பெயர்ப்பாளராக மதுசூதன் பங்கேற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com