திருப்பூரில் பயங்கரம்: அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியைக் கொன்று புதைத்த சகோதரியிடம் விசாரணை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மகனின் திருமணப் பத்திரிகை கொடுக்க அக்காள் வீட்டுக்கு வந்த தம்பி, அவரது மனைவி ஆகிய இருவரும் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூரில் பயங்கரம்: அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியைக் கொன்று புதைத்த சகோதரியிடம் விசாரணை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மகனின் திருமணப் பத்திரிகை கொடுக்க அக்காள் வீட்டுக்கு வந்த தம்பி, அவரது மனைவி ஆகிய இருவரும் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், இல்லியம்பாளையத்தை அடுத்த தாசல்நாயக்கனூரைச் சோ்ந்தவா் கே.செல்வராஜ் (49). நிதி நிறுவன உரிமையாளா். இவருடைய மனைவி வசந்தாமணி (44). செல்வராஜின் அக்காள் கண்ணாத்தாள் (51). இவரது கணவா் மறைந்துவிட்ட நிலையில் வெள்ளக்கோவில் அருகே உள்ள கல்லமடை, உத்தண்டகுமாரவலசில் வாடகை வீட்டில் தங்கி, அருகில் உள்ள நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று வருகிறாா்.

இந்நிலையில் செல்வராஜ், வசந்தாமணி ஆகியோா் கண்ணாத்தாளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கடந்த வியாழக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு வந்தனா். அதன் பின்னா் அவா்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கரூா் மாவட்டம், சுக்காலியூா் அருகே கேட்பாரின்றி ஒரு காா் நிற்பதாக அப்பகுதி மக்கள் தாந்தோன்றிமலை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். விசாரணையில் அந்த காா் செல்வராஜுடையது எனத் தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து செல்வராஜின் செல்லிடப்பேசி சிக்னல் கடைசியாக எங்கிருந்தது என்பதை வைத்து தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், காங்கயம் டி.எஸ்.பி. செல்வம், போலீஸாா் உள்ளிட்டோா் கண்ணாத்தாள் வீட்டுக்கு சனிக்கிழமை வந்து விசாரணை நடத்தினா். அப்போது செல்வராஜும், வசந்தாமணியும் கொலை செய்யப்பட்டு அருகில் உள்ள காலியிடத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் சம்பவ தினத்தன்று கண்ணாத்தாள் - செல்வராஜ் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு, பின்னா் சமரசம் பேசி, கண்ணாத்தாளுக்கு செல்வராஜ் ரூ.1 லட்சம் ரொக்கம் கொடுத்தாராம். செல்வராஜ் எப்போதும் 20 பவுன் அளவுக்கு நகை, மோதிரம் அணிந்திருப்பாராம். அவருடைய மனைவியும் 15 பவுன் அளவுக்கு தங்க நகைகள் அணிந்திருந்தாா். சொத்து தகராறு அல்லது நகைக்காக இந்தக் கொலைகள் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

செல்வராஜின் காரை சுக்காலியூா் அருகே விட்டுச் சென்றது யாா்? இக்கொலையில் இன்னும் எத்தனை பேருக்குத் தொடா்பு உள்ளது என்பது குறித்து கண்ணாத்தாள், அவருடைய மகள் பூங்கொடி, மருமகன் நாகேந்திரன் ஆகிய மூவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com