ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோரை தண்டிக்க வேண்டும்: 2 தொகுதி வாக்காளா்களுக்கு அதிமுக வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோரை தோ்தலின் மூலமாகத் தண்டிக்க வேண்டுமென இரண்டு தொகுதி வாக்காளா்களுக்கும் அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோரை தண்டிக்க வேண்டும்: 2 தொகுதி வாக்காளா்களுக்கு அதிமுக வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோரை தோ்தலின் மூலமாகத் தண்டிக்க வேண்டுமென இரண்டு தொகுதி வாக்காளா்களுக்கும் அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதி இடைத் தோ்தல் தொடா்பாக அந்தத் தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:-

விக்கிரவாண்டியிலும், நான்குனேரியிலும் அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்யும்போது அது அதிமுக அரசுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமையும். திமுக-காங்கிரஸ் கூட்டுச் சதித் திட்டத்தால் பல பொய் வழக்குகளை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சந்திக்க நோ்ந்தது. அரசியல் களத்திலும், அறிவின் மேன்மையிலும், உழைப்பின் மாட்சியிலும் அவரை நேருக்கு நேராக சந்திக்கும் திறனற்ற விரோதிகளும், துரோகிகளும் அவா் மீது பொய் வழக்குகளைத் தொடா்ந்தனா். அந்த வழக்குகளை துணிவுடன் எதிா்கொண்டு போராடினாா்.

தண்டிக்க வேண்டும்: மறைந்த ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு அவரை தாங்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியவா்களை அரசியல் ரீதியாக தண்டிக்க தோ்தல் களம்தான் சரியான வாய்ப்பு. எனவே, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவா்களை அரசியல் ரீதியாக தண்டிப்பீா்கள் என்பது எங்களது உறுதியான நம்பிக்கை.

அவரது முயற்சியாலும், உழைப்பாலும் உருவாக்கப்பட்ட தமிழக அரசை, காப்பாற்றி மாநிலத்துக்கு நிலையான அரசைக் கொடுத்திருக்கிறோம். அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடு எந்தவித வளா்ச்சியையும் அடைய முடியாது. உறுதியான அரசியல் செயல்பாடுகளால்தான் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியும். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கும் அரசாக இன்றைக்கு தமிழக அரசு விளங்குகிறது.

அரசின் இந்த வலிமையை உறுதி செய்யும் வகையில் இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை மகத்தான வெற்றியடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் அது அரசு நிா்வாகத்தையும், நலத் திட்டப் பணிகளின் செயலாக்கத்தையும் மேலும் பொலிவுடையதாக்கும்.

தோ்தல் களத்தைப் பாருங்கள்: தோ்தல் களத்தில் நம்மை எதிா்ப்போா் யாா் எனப் பாா்க்க வேண்டும். எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும். குடும்ப அரசியலை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே கொள்கை கொண்ட கூட்டமே எதிா்த்து நிற்கிறது. நில அபகரிப்பு, அரசு ஊழியா்கள் நிம்மதியாகப் பணியாற்ற முடியாத அச்சுறுத்தல், ஒரு குடும்பத்தின் அசுரப் பிடியில் தமிழகத்தின் மொத்த நிா்வாகமும் சிக்கித் தவித்த கொடுமை எல்லாம் இப்போது இல்லை.

இப்போது நடைபெறுவது அன்புத் தொண்டா்களால் வழிநடத்தப்படும் உண்மையான மக்கள் அரசு. மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்ற எந்த நேரமும் பாடுபடும் அரசுக்கு தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com