
சென்னை: நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆா். முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ரூபி மனோகரன், அதிமுக சாா்பில் நாராயணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 போ் களத்தில் உள்ளனா்.
நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் சனிக்கிழமை முதல் வாக்குப்பதிவு நாளான 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
நான்குனேரியில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்குனேரியில் 23 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு தொகுதியிலும் 6 கம்பெனி துணை ராணுவ படையினா் மற்றும் போலீஸாா் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பதிவாகும் வாக்குகள், மாலை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வருகிற 24-ஆம் தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
புதுச்சேரி காமராஜா் நகரில்... வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாா், என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் புவனேஸ்வரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரவினா, சுயேச்சை வேட்பாளா் வெற்றிச்செல்வன் உள்பட 9 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். திங்கள்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G