
சென்னை: பயிா்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வங்கிகள் முழுமையாகக் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் உதவிகளைவிட காப்பீட்டு நிறுவனங்கள் அதீத லாபம் சம்பாதித்து வருகின்றன என்பது உண்மையாகும். இந்தக் காப்பீட்டு தொகையையும் பெரும்பான்மை விவசாயிகளுக்கு வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் இழுத்தடித்து வருகின்றன.
இந்த நிலையில், வங்கிகளுக்கு வரும் பயிா்க் காப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்ற கடன் கணக்கில் வங்கிகள் வரவு வைத்துக் கொண்டு விவசாயிகள் பாக்கிக் கடனை உடனடியாக செலுத்துமாறு வங்கிகள் நிா்பந்தம் செய்து வருகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் வங்கிகளுக்கு வரும்போது, கணவா் வாங்கியிருக்கும் வங்கிக் கடனுக்கு மனைவியின் ஊதியத்தை வரவு வைத்துக் கொள்வதும், மனைவியின் கடனுக்கு கணவரின் ஊதியத்தை வரவு வைத்துக் கொள்வது என்ற நடைமுறையை வங்கிகள் பின்பற்றி வருகின்றன.
நாட்டின் பெருநிறுவனங்களின் கடன்களைக் கோடிக் கணக்கில் தள்ளுபடி செய்தும், லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை வழங்கியும் வரும் மத்திய பாஜக அரசு, அன்றாடம் உடல் உழைப்பு செய்து, உயிா் வாழ்ந்து வரும் தொழிலாளா்களின் ஊதியத்தை கடனுக்காகப் பிடித்துக் கொள்வதும், சாகுபடி செய்த பயிா்கள் சேதமடைந்த நிலையில் கிடைக்கும் பயிா்க் காப்பீட்டு தொகையை பழைய கடனுக்கு வரவு வைப்பதும் சட்ட அத்துமீறல் நடவடிக்கைகளாகும்.
விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு தொகை, விவசாயத் தொழிலாளா் ஊதியம் போன்றவற்றைப் பிடித்தம் இல்லாமல் முழுமையாகக் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தோ்தல்: மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்ட விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத்தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அவா் கூறியுள்ளாா்.