

திமுக, காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
நான்குனேரி தொகுதியில் அதிமுக சார்பில் வி.நாராயணன், காங்கிரஸ் சார்பில் ஆர்.மனோகரன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதேபோன்று, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.முத்தமிழ்செல்வனும், திமுக சார்பில் என்.புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கே.கந்தசாமியும் போட்டியிட்டனர். நான்குனேரியில் 13 வேட்பாளர்களும், விக்கிரவாண்டியில் 23 பேரும் களத்தில் இருந்தனர்.
நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 21-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடந்தது. நான்குனேரியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 680 வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 692 வாக்குகளும் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
நான்குனேரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும் நடந்தது. இரண்டு தொகுதிகளிலும் முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெறத் தொடங்கினர். நான்குனேரி தொகுதியில் மட்டும் ஒரு சுற்றில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் நாராயணனே வெற்றி முகம் காட்டி வந்தார்.
இறுதியாக, நான்குனேரி தொகுதியில் வி.நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.மனோகரன் 61 ஆயிரத்து 932 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் நாராயணன் 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் ஆர்.முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்குகளையும், திமுக வேட்பாளர் என்.புகழேந்தி 68 ஆயிரத்து 842 வாக்குகளையும் பெற்றனர். 44 ஆயிரத்து 924 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
நாம் தமிழரும்-சுயேச்சைகளும்: இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சியும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி 2 ஆயிரத்து 921 வாக்குகளும், நான்குனேரியில் 3 ஆயிரத்து 494 வாக்குகளையும் பெற்றது.
விக்கிரவாண்டியைக் காட்டிலும் நான்குனேரியில் சுயேச்சைகள் கவனத்தைப் பெற்றனர். சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ.ஹரி நாடார், 4 ஆயிரத்து 242 வாக்குகளைப் பெற்றார். இரண்டு தொகுதிகளிலும் நோட்டாவுக்கு குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின. நான்குனேரியில் 1,154 வாக்குகளும், விக்கிரவாண்டியில் 1,560 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: முதல்வர்
விக்கிரவாண்டி, நான்குனேரியில் இடைத் தேர்தல் மூலமாக அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை அளித்த பேட்டி: இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றனர். ஆனால், இப்போது உண்மை நிலையைத் தெரிந்து கொண்டு இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு மக்கள் வெற்றியை அளித்துள்ளனர்.
எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டத் தேர்தல் இதுவென எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர். அவர்கள் கூறிய இந்த முன்னோட்டத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.