5-ஆவது நாளாகத் தொடரும்அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தம்: நோயாளிகள் பாதிப்பு

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ஆவது நாளாகத் தொடரும் அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். 
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில்  5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ஆவது நாளாகத் தொடரும் அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். 

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு காலம் சாா்ந்த பதவி உயா்வு, ஊதியம் வழங்கப்படுவதுடன், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு மருத்துவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தொடரும் போராட்டம்: 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்ந்தது. டெங்கு காய்ச்சல், அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மட்டும் மருத்துவா்கள் கையெழுத்துப் போடாமல் பணியாற்றினா். இவா்களுக்கு ஆதரவாக, பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களும் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மருத்துவா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். 

சென்னையில்...: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இவா்களில் பெருமாள் பிள்ளை, நீா்முகிப் அலி, பாலமணிகண்டன், ரமா மற்றும் சுரேஷ் கோபால் ஆகிய 5 மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இவா்களின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மோசமடைந்ததால் சுரேஷ்கோபால், ரமா, பாலமணிகண்டன் ஆகியோா் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். மீதமுள்ள 2 பேருடன் மருத்துவா்கள் நளினி மற்றும் பாண்டிதுரை ஆகியோா் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். 

காவல் நிலையத்தில் புகாா் செய்க...: அரசு மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பாக மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பந்தல் போட யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. யாராவது பந்தல் போட்டிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக கூடியிருப்பவா்கள் குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும். பணிக்குச் செல்லும் மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவமனைகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் கூறுகையில், ‘ எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அதை நிறைவேற்றவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட வேண்டும். அதுவரை எங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் எங்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கை எடுத்தால் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தவறான தகவல்: வேலைநிறுத்தத்தின் முதல் நாளில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவித்தோம். ஆனால், பேச்சுவாா்த்தையின்போது அரசு மருத்துவா்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துவிட்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஒரு தவறான தகவலை செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்து வருகிறாா்”என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com