
அனைத்துத் தரப்பினரும் உயர்தர மருத்துவ சேவைகளைப் பெறும் வகையில், தமிழக அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பெருமிதம் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், அரிச்சபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் நடைபெற்ற இம்முகாமை, அமைச்சர் ஆர். காமராஜ் தொடக்கி வைத்துப் பேசியது:
அனைத்துத் தரப்பினரும் உயர்தர மருத்துவ சேவைகளைப் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், தமிழக அரசு மருத்துவத் துறையில் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. இச்சிறப்பு மருத்து முகாமின் மூலம் சாதாரண மக்களின் அனைத்து விதமான உடல் நோய்களையும் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சைகளைப் பெறலாம் என்ற நிலையை உருவாக்கியவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவர் வழியில் தமிழக அரசு தொடர்ந்து மருத்துவ முகாமை நடத்தி வருகிறது. இம்மருத்துவ முகாமில் பொது நலம், தோல் மருத்துவம், குழந்தைகள் நலம், காசநோய் போன்ற சிகிச்சைகளும், ரத்த கொதிப்பு உள்ளிட்ட அனைத்து ஆய்வக ரத்த பரிசோதனைகளும் நடைபெறும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ், 5 தவணைகளாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் மாவட்டத்துக்குத் தேவையான அடிப்படை வளர்ச்சி திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றார் அமைச்சர். தொடர்ந்து, கருவுற்ற தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.