
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகவும் சனிக்கிழமை காலை நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை காலை மேட்டூர்அணையின் நீர்மட்டம் 117.40 அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.38 டி.எம்.சி.யாக இருந்தது.