
திருவாரூர்: அஞ்சல் அட்டைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால், அஞ்சல் அட்டை விற்பனை நிறுத்தப்படுகிறதோ என்ற குழப்பம் ஏற்படுவதாக அஞ்சல் அட்டை பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தகவல் தொடர்புகளுக்கு 50 பைசா அஞ்சல் அட்டைகள் உறுதுணையாக இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அலைபேசி பிரபலமாகாதபோது, வாழ்த்துச் சொல்லவும், தகவல் தெரிவிக்கவும் இந்த அஞ்சல் அட்டைகள் முக்கிய பங்கு வகித்தன. கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து அறிவிக்கவும், வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்தவும் கூட அஞ்சல் அட்டைகள் பயன்பட்டன.
1879 }லிருந்து வழக்கத்தில் உள்ள அஞ்சல் அட்டைகள், மக்களின் வாழ்க்கையில் அங்கமாக விளங்கியது. அணா பைசா அளவில் விற்பனை செய்யப்பட்ட அஞ்சல் அட்டைகள், 10 பைசா, 15 பைசா, 25 பைசா என அதிகரித்து, தற்போது 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பல ஆண்டுகளாக 15 பைசா என அஞ்சல் அட்டை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் போட்டிகளுக்கு அனுப்புவதற்காக பிரத்யேகமாக ரூ. 1 }க்கு அஞ்சல் அட்டைகள் விற்கப்பட்டன. தற்போது அவைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக அஞ்சல் அட்டை பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அலைபேசி வந்தபிறகு, மக்களிடையே அஞ்சல் அட்டைகளின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. வாழ்த்துகளையும், தகவல்களையும் அலைபேசியிலேயே பரிமாறிக் கொள்வதால், அஞ்சல் நிலையங்களுக்கு மக்கள் செல்வதும் குறைந்துவிட்டது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் அஞ்சல் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் துணை அஞ்சலகங்கள், கிராமப்புற கிளை அஞ்சலகங்கள் என 350 }க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன. அனைத்திலுமே அஞ்சல் அட்டைகள் கிடைக்காத நிலை நிலவுகிறது.
திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையத்தில்கூட, அஞ்சல் அட்டைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அஞ்சல் அட்டை பயன்பாடு மக்களிடையே குறைந்துவிட்டதால், அதன் விற்பனையில் அஞ்சலகங்கள் ஆர்வம் செலுத்துவதில்லை எனவும், இதனால், அஞ்சல் அட்டைகளின் விற்பனை விரைவில் நிறுத்தப்படலாம் என்ற தகவல் உலவுவதாகவும் அஞ்சல் அட்டை பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வானொலி கேட்போர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஓய்வுபெற்ற அஞ்சலகப் பிரிப்பக அலுவலருமான வி. தர்மதாஸ் கூறியது:
அஞ்சல் அட்டை பயன்பாடு மக்களிடையே குறைந்துவிட்டது. வானொலி, பத்திரிகைகளுக்கு கடிதம் அனுப்புவோர் மட்டுமே அஞ்சல் அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கவும், புதிய பொருள்கள் குறித்து தெரிவிப்பதற்காகவும், அஞ்சல் அட்டைகளை பயன்படுத்தி வருகின்றன.
அலைபேசியில் உடனடியாக தகவல் சென்றுவிடுவதால், அஞ்சலகங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், அஞ்சல் அட்டை தட்டுப்பாட்டுக்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. தற்போது கிராமப்புற அஞ்சலகங்கள்கூட கணினி மயமாகிவிட்டன. எனவே, அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளில், அஞ்சல் அட்டையை இருப்பில் காட்டுவதற்கான அமைப்பு இல்லை என அஞ்சல் துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அதாவது, 50 பைசா கணக்கில் காட்டுவதில் குளறுபடி நிலவும் என்பதால், அஞ்சல் அட்டை இருப்பு குறித்து அஞ்சலகங்களில் முறையாக பராமரிக்க முடியாததுடன், தலைமை அலுவலகங்களிலிருந்து அஞ்சல் அட்டை பெறுவதில் குளறுபடி நிலவுகிறது.
மேலும், அஞ்சல் அட்டை உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாலேயே, அஞ்சல் அட்டை குறித்து மென்பொருளில் தரப்படவில்லை என்றும் அஞ்சல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அஞ்சல் அட்டையைப் பயன்படுத்தும் மக்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
திருவாரூர் மட்டுமன்றி தமிழகம் முழுவதுமே அஞ்சல் அட்டை தட்டுப்பாடு நிலவுவதால், மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, அஞ்சல் அட்டையைப் பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து, தாராளமாக அஞ்சல் அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏழை, எளிய மக்களுக்கு தகவல் தொடர்பியலில் உற்ற தோழனாக விளங்கிய அஞ்சல் அட்டைகள், பெருவாரியான மக்களின் வரவேற்பை இழந்துவிட்டன.
ஆனாலும், அஞ்சல் அட்டைகளின் தேவைகள் இன்னமும் குறையவில்லை. அரசு அலுவலகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இன்னமும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டாக அஞ்சல் அட்டைக்கு நிலவும் தட்டுப்பாடு, அஞ்சல் அட்டை விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்துவதற்கான முன்கட்ட பரிசோதனையோ என்ற குழப்பம் மக்கள் மனதில் நிலவுகிறது.
எனவே, அஞ்சல் அட்டை தட்டுப்பாட்டை போக்கி, அனைத்து இடங்களிலும் அஞ்சல் அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அஞ்சல் அட்டை பயன்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பு.
- சி. ராஜசேகரன்