ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புதன்கிழமை தெரிவித்தார். 
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் போரூர் கிளையை திறந்து வைத்துப் பயனாளிக்கு  நலத்திட்ட உதவி வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.  
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் போரூர் கிளையை திறந்து வைத்துப் பயனாளிக்கு  நலத்திட்ட உதவி வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.  


ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ புதன்கிழமை தெரிவித்தார். 

போரூரில் அமைக்கப்பட்ட சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 70-ஆவது கிளையைத் திறந்து வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது: 
1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 31-ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் வைப்புத்தொகை, ரூ.2,737.46 கோடி. 2011 முதல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில், 120 கிளைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 56 கிளைகளுக்கு ரூ.34.18 கோடி செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 22 கிளைகள் ரூ.2.63 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 

தனிநபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் நகைக்கடன் அளித்து வருகிறது. 2011 முதல் கடந்த ஜூலை 31 வரை மாநில அளவில் 5 கோடி 75 லட்சத்து 66 ஆயிரத்து 41 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 536.83 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும், 2013 முதல் கடந்த 31-ஆம் தேதி வரை, 8 லட்சத்து 52 ஆயிரத்து 992 நபர்களுக்கு ரூ.8,505.56 கோடி நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2011 முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 56,652 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.227.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ராயபுரத்தில் வங்கிக்கு சொந்தமான இடத்தில் ரூ.108 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டவும், சோழிங்கநல்லூர், கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் புதிய கிளைகள் திறந்திடவும், அண்ணா நகர் புளூஸ்டார் கிளையில் தானியங்கி பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்திடவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
திமுக ஆட்சியில் மின்சாரம் எப்போது துண்டிக்கப்படும் என மக்களுக்கு தெரியாது. தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் தொழில் தொடங்க முடியாது. அதற்கான இடம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். அவர் வந்த பிறகே விரிவான அறிக்கையை வழங்குவார். 
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவிலேயே விலையில்லாமல் அரிசி கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் வேறு மாநிலத்தவர்கள் ரேஷன் பொருள்களை வாங்க வேண்டுமெனில், அவர்களின் சொந்த மாநிலத்தின்  விதிமுறையின் படிதான் வாங்க முடியும். 
புதிதாக, வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் பொருள்களை வாங்குபவரின் ரேஷன் அட்டைகள், ஆன்லைனில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கான அரிசியைப் பெற்றுக் கொடுப்போம். இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் பொருள்களுக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்றார். 
முன்னதாக 2 கோடியே 35 லட்சம் 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவியை பயனாளிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ  வழங்கினார். 
நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (பொறுப்பு) கு.கோவிந்தராஜ், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.அலெக்சாண்டர், கூடுதல் பதிவாளர்  வெ.லெட்சுமி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.மகேஷ், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் கே.ஜி.மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com