சுருளி அருவியில் நுழைவுக் கட்டணம் 6 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம்  6 மடங்கு உயர்ந்து ரூ.30 ஆக வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள்
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நுழைவுக் கட்டண உயர்வு குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நுழைவுக் கட்டண உயர்வு குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம்  6 மடங்கு உயர்ந்து ரூ.30 ஆக வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இதுவரை அருவிப் பகுதிக்குச் செல்ல ரூ.5 கட்டணம் நிர்ணயித்து வனத்துறையினர் வசூலித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் நுழைவுக் கட்டணமாக ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது என்று வனத்துறையினர், அறிவிப்புப் பதாகை வைத்துள்ளனர். அதனால் இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
நுழைவுக் கட்டண விவரம்: குழந்தை ஒரு நபருக்கு ரூ.20, பெரியவர் ஒரு நபருக்கு ரூ.30, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி குழந்தை ஒருவருக்கு ரூ.200, பெரியவர் ஒருவருக்கு ரூ.300  மற்றும் உள்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைக்கு ரூ.5 மற்றும் 50 தனியார் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வசிப்பவர்கள் புகைப்படக் கருவி கொண்டு வந்தால்  ரூ. 50, விடியோ கேமராவுக்கு ரூ.300, வெளிநாட்டவர் கொண்டு வரும் புகைப்படக் கருவிக்கு ரூ.500, விடியோ கேமராவுக்கு ரூ.3,000  வசூலிக்கப்படும் என அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்றும், காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
இதுகுறித்து சுற்றுலா பயணியான மதுரையைச் சேர்ந்த அப்துல்காதர் கூறியது: குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மதுரையிலிருந்து சுருளி அருவிக்கு குளிக்க வந்தோம். நுழைவுக் கட்டணத்தை 6 மடங்காக  உயர்த்தியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தோம். வேறுவழியின்றி கட்டணம் செலுத்திவிட்டு  குளித்து விட்டு செல்கிறோம் என்றார்.
இதுகுறித்து சுருளி அருவி வனவர் திலகர் கூறியது: 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 இல், தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் நுழைவுக் கட்டணம் உயர்த்த உத்தரவு வந்தது. வெள்ளிக்கிழமை முதல் இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளோம் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com