
கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீர்.
கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 10 ஆயிரத்து 150 கனஅடி வீதம் உபரி நீர் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம், கீழணையில் தேக்கப்படும் தண்ணீர் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவை மூலம் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாள்களாக உபரி நீர் அதிகளவு திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் உச்ச நீர்மட்டமான 9 அடியில், தற்போது 8 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. உபரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 10 ஆயிரத்து 150 கன அடி வீதம் செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் கடலுக்குச் செல்கிறது.மேலும், கீழணையிலிருந்து வடவாற்றில் விநாடிக்கு 2,120 கனஅடி நீரும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 536 கனஅடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 584 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 46.80 அடியாக இருந்தது. அணையிலிருந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்கு விநாடிக்கு 46 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியிலிருந்து புதன்கிழமை காலை 7 மணியளவில் மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறார்.