
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த சென்னையைச் சேர்ந்த பயணியிடம் ரூ. 17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சியை வந்தடைந்தது. அதில் பயணம் செய்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும், சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின்போது, சென்னையைச் சேர்ந்த பட்டூர் ஜமான் என்பவர் தனது சூட்கேசில் உடைமைகளுக்குள் மறைத்து 9 தங்கக் கட்டிகளை எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 450 கிராம் எடையிலான தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 17.15 லட்சம் என சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.