
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.10) தொடங்கியது. முதல் நாளில், 500க்கும் மேற்பட்டோருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
பி.பார்ம், பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள்உள்ளன. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது. இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில், விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மொத்தமாக 23 ஆயிரத்து 778 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அவை பரிசீலனை செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மொத்தம் 22 ஆயிரத்து 155 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (செப்.10) தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 12, 13, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.