
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பிரிட்டன், அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளில் மேற்கொண்ட பயணத்தின் மூலமாக ரூ.8,835 கோடிக்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், அமெரிக்கா, துபை ஆகிய நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக அங்குள்ள பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், நேரில் கண்டறிந்து வந்துள்ளேன். அவற்றை இங்கு நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை தொடர்ந்து திகழச் செய்ய முடியும்.
அரசு முறை பயணமாக பிரிட்டன், அமெரிக்கா, துபை நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்தேன். மொத்தம் ரூ.8 ஆயிரத்து 835 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35 ஆயிரத்து 520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்கள், தொழில்கள் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் அரசு விரைந்து செய்து கொடுக்கும். பிரிட்டன், அமெரிக்கா, துபை போன்ற நாடுகளில் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வழியில் தமிழக அரசும், சுற்றுலாவுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழகத்தில் சுற்றுலாவுக்கு உகந்த சிறந்த மையங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்தப் பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவியதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே தமிழகத்தின் மீது ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் இஸ்ரேல் பயணம்: இஸ்ரேல் நாட்டுக்கு அடுத்து செல்லவிருக்கிறோம். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
நமது மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படுவதால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்றார் முதல்வர்.