அண்ணா பல்கலை.க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை வழங்கியிருக்கும் நிலையில், அதற்கான நிதியுதவியில் மாநில பங்களிப்பை ஏற்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும்
அண்ணா பல்கலை.க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை வழங்கியிருக்கும் நிலையில், அதற்கான நிதியுதவியில் மாநில பங்களிப்பை ஏற்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.
உலகத் தரத்துக்கு இந்திய பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களை உயர்த்தும் நோக்கத்தோடு மேம்பட்ட கல்வி நிறுவன திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்கள், 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதிலுமிருந்து 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.  இத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படாது என்ற போதிலும், பிற சுதந்திரங்கள் அனைத்தும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெங்களூரு  இந்திய அறிவியல் கழகம், தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்களும், மணிபால் உயர் கல்வி நிறுவனம், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகிய 3 தனியார் கல்வி நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன.
இரண்டாம் கட்டமாக சென்னை ஐஐடி, வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், காரக்பூர் ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய 5 அரசு பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், தமிழகத்தில் உள்ள வேலூர் விஐடி, அமிர்தா விஷ்வவித்யபீடம், புதுதில்லி ஜாமியா ஹதார்த் கல்வி நிறுவனம், ஒடிஸாவில் உள்ள கலிங்கா தொழில்நிறுவன தொழில்நுட்ப கல்வி நிறுவனம், மொஹாலியில் உள்ள சத்திய பாரதி அறக்கட்டளையின் பாரதி கல்வி நிறுவனம் ஆகிய தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன.
அதுபோல, மாநில அரசு பல்கலைக்கழகங்களான சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவையும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், இந்த இரண்டு மாநில அரசு கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை, அந்தந்த மாநில அரசுகள் திட்ட நிதியில் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்து உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இந்த உத்தரவாதத்தை தமிழக அரசு இன்னும் அளிக்காததால், அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்பட்ட கல்வி நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வருக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், நாடு முழுவதும் உள்ள 800 மாநில அரசு பல்கலைக்கழகங்களில், அண்ணா பல்கலைக் கழகம் உள்பட இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமைக்குரிய விஷயமும் ஆகும். இந்த அந்தஸ்தைப் பெறுவதன் மூலம் யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்று, முழு சுதந்திரத்துடன் கல்வியிலும், ஆராய்ச்சியிலும் அண்ணா பல்கலைக்கழகம் மேம்பட முடியும். உலகத் தரத்திலான கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் உயர இது வழிவகுக்கும். எனவே, இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அண்ணா பல்கலைக்கழகம் மேம்பட அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com