ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்பட்டுள்ள பால்கோவா.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்பட்டுள்ள பால்கோவா.


ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயிலுக்கு, தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு விற்பனையாகும் பால்கோவாவையும் தவறாமல் வாங்கிச் செல்வது வழக்கம்.  இனிப்பு பதார்த்தமான இந்த பால்கோவா, சுத்தமான பால் மற்றும் சர்க்கரையால் தயாரிக்கப்படுகிறது. திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவும் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.    இங்கு, பால்கோவா தயாரிப்பில் கடந்த 1940 ஆம் ஆண்டு முதல் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது, 15 நாள்கள் வரை கெடாமல் அதே சுவையுடன் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பால்கோவாவால் எந்தவிதத் தீங்கும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி, கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் கடந்த 2012 இல் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.
இதனால், உலகளவில் பால்கோவா விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதன் உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்பும் பெருகும் என, உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மத்திய அரசின் புவிசார் குறியீட்டுத் துறை சார்பில் இதுவரை காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், காரைக்குடி கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com