அமித்ஷாவின் ஒரே தேசம், ஒரே மொழி கருத்து: தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

​நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போதுதான், வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போதுதான், வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இன்று ஹிந்தி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று, "ஒற்றை மொழியாக ஹிந்தி மொழி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும்" என்று டிவீட் செய்திருந்தார். இதன்பிறகு, இதுதொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோதும் அவர் இந்தக் கருத்தையே குறிப்பிட்டிருந்தார்.


அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்ற முறையில் இந்தி மொழியை எல்லா மாநிலங்களும் கற்க வேண்டும், பேச வேண்டும் என அவரது சுட்டுரையில் வலியுறுத்தியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி மொழியை பிற மாநிலங்களில் திணித்து விடும்  முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புதான் தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அச்சாணி என்பதை நிராகரித்து வருகிறார்கள்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழ்நாட்டு மக்கள் விரும்பி ஏற்கும் வரை ‘இந்தி ‘கட்டாயம் இல்லை’ என அளித்த உறுதி மொழி காப்பாற்றப்பட வேண்டும். தமிழ் மொழி பேசும் அனைவரும் ஒன்றுபட்டு மத்திய அரசின் மொழிவெறிக் கொள்கை முறியடிக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கருத்து ஏற்புடையதல்ல. ‘வேற்றுமையில் ஒற்றுமை’யே உலக அரங்கில் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளம். இந்தியைவிட தொன்மையும், வளமும், ஆளுமையும் மிக்க தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும். கடந்த கால வரலாறு சொல்லும் இந்தப்பாடத்தைப் புரிந்து கொண்டு இக்கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது! உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே? இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.


முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இது இந்தியாவா? அல்ல இந்தி-யாவா?" என்று விமரிசித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com