திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 3.5 மடங்கு அந்நிய நேரடி முதலீடு: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்

திமுக ஆட்சியைவிட  அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றரை மடங்கு அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 3.5 மடங்கு அந்நிய நேரடி முதலீடு: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்


திமுக ஆட்சியைவிட  அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றரை மடங்கு அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், இதுவரை பெறப்பட்ட முதலீடுகளின் நிலைகள் பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2006-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2011-ஆம் ஆண்டு மே வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கிடைத்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.25,977 கோடியாகும். 

ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு ஜூன் வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ.1.47 லட்சம் கோடியாகும். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் கிடைத்த முதலீடு ரூ.18,350 கோடியாகும். அதாவது, திமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும் போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றரை  மடங்கு 
அளவுக்கு கூடுதல் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.

முதலீட்டாளர் மாநாடு: கடந்த 18 ஆண்டுகளில் வரப்பெற்ற அந்நிய நேரடி முதலீடான ரூ.1.8 லட்சம் கோடியில் சுமார் 47 சதவீதம் அதாவது ரூ.84 ஆயிரத்து 269 கோடியானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்திய முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகே வந்தது. முந்தைய 15 ஆண்டுகளில் வரப்பெற்ற மொத்த அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஈடாக மாநாடு நடைபெற்ற நான்கே ஆண்டுகளில் தமிழகம் புதிய அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தனியார் துறை முதலீடு மட்டும் ரூ.1.02 லட்சம் கோடியாகும். முதல் முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் மூலமாக ரூ.1.04 லட்சம் கோடி முதலீடானது பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது. 1.61 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு கடந்த ஜனவரியில் நடந்தது. அதில் 221 நிறுவனங்கள் பணிகளைத் தொடக்கி பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இது மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கையில் 73 சதவீதமாகும்.
முதல்வரின் பயணம்: முதலீட்டாளர் மாநாடுகளைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி அண்மையில் வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றார். அங்கு 41 நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலமாக ரூ.8,835 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 

இந்த விவரங்கள் மூலமாக சர்வதேச மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறனில், முன்னணி மாநிலமாக தமிழகம் தொடர்ந்து விளங்கி வருகிறது என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com