அமித் ஷா பேச்சு: தமிழக தலைவர்கள் கண்டனம்

இந்தியாவின் ஒற்றை மொழியாகவும் அடையாள மொழியாகவும் ஹிந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
அமித் ஷா பேச்சு: தமிழக தலைவர்கள் கண்டனம்

இந்தியாவின் ஒற்றை மொழியாகவும் அடையாள மொழியாகவும் ஹிந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: நாடு முழுமைக்கும் ஒரே மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவுக்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் ஹிந்திதான் அந்த அடையாளத்துக்குரிய மொழி என அமித்ஷா கருத்து வெளியிட்டுள்ளார்.  இது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்தி பேசாத மக்கள் அனைவரையும் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியாகவே தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்பட வேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான ஹிந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அமித் ஷா தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் திமுக இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். 
ராமதாஸ் (பாமக):  இந்தியாவின் ஒற்றை மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து தவறானது. ஹிந்தி மொழி நாளில் ஹிந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது ஹிந்தியைத் திணிக்கக் கூடாது. உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக ஹிந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு ஹிந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிறமொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களைப் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல்.  பிறமொழி பேசும் மக்கள் மீது ஹிந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டைப் பிளவுபடுத்திவிடும். 
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே கடும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. பாஜக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இருந்து வருகின்றன. இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்  பெற வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்தி மொழியைப் பிற மாநிலங்களில் திணிக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புதான் தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அச்சாணி என்பதை மத்திய ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே உள்துறை அமைச்சரின் சுட்டுரைப் பதிவும் அமைந்துள்ளது. தமிழ் மொழிக்கு கேடு செய்யும் நோக்கத்தோடு, ஹிந்தி திணிக்கப்பட்டபோது தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது.
டிடிவி தினகரன் (அமமுக): மொழி தொடர்பான அமித்ஷாவின் கருத்து ஏற்புடையது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமையே உலக அரங்கில் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளம். ஹிந்தியை விட தொன்மையும், வளமும், ஆளுமையும் மிக்க தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் தொடர்ந்து ஹிந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும். கடந்த கால வரலாறு சொல்லும் பாடங்களைப் புரிந்து கொண்டு தனது கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): ஒரே நாடு ஒரே மொழி என்று ஹிந்தியை அமித்ஷா கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. அனைத்து மொழிகளுக்கும் தனித்துவம் உண்டு. 8-ஆவது அட்டவணையில் அனைத்து மொழிகளையும் ஒரே நிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): ஹிந்திதான் இந்தியாவின் தாய்மொழி என்று அமித்ஷா பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குறைந்த மக்களால் பேசப்படும் ஒரு மொழி எப்படி இந்தியாவுக்குப் பொது மொழியாகவும், 130 கோடி மக்களின் ஆட்சி மொழியாகவும் இருக்க முடியும்?.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com