பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு, 50 பேர் கொண்ட சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழுவினர் மாமல்லபுரத்தில்
மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர். 
மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர். 


பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் வருகை தருவதை முன்னிட்டு, 50 பேர் கொண்ட சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழுவினர் மாமல்லபுரத்தில்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி 3 நாள் பயணமாக வருகை தர உள்ளனர்.   
இங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம்  உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்க உள்ளனர். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வியாழக்கிழமை வந்து சென்றனர். அவர்கள், மாமல்லபுரத்தின்  முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்வையிட்டனர். 
தற்போது, மாமல்லபுரம் நகரம் பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.   
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரி எஸ்.எஸ்.ஷோஹனுடன், சீனாவில் இருந்து வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தனர்.
அவர்கள், சீன அதிபர் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள் குறித்தும் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.  வெண்ணை உருண்டைப்பாறை, அர்ச்சுனன் தபசு,  கடற்கரைக் கோயில், ஐந்துரதம் ஆகிய இடங்களில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து புகைப்படம் எடுத்ததுடன், அதுகுறித்து குறிப்புகளும் எடுத்தனர். 
பின்னர், மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 
இக்குழுவினருடன், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாமல்லபுரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல் ஆய்வாளர் ரவிக்குமார், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல், திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com