கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: ச.ராமதாஸ்

கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்


கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில் பழங்கால தமிழர்களின் நாகரிகத்தை, வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல்  முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தெரியவந்துள்ள முடிவுகளைத் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்  சென்னையில்  வெளியிட்டுள்ளார்.
அந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள திமிலுள்ள காளையின் எலும்புகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொருள்களில் 6 பொருள்கள் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, கரிம ஆய்வு செய்யப்பட்டதில், அவை கி.மு. 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. 
இதன்மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
சிந்து வெளி நாகரிகத்தில் இருந்தது போலவே திமில் உள்ள காளைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த நாகரிகத்துடன் தமிழர்களுக்கு உள்ள நெருங்கிய  தொடர்பு, ரோம் நாட்டைச் சேர்ந்த அரிட்டைன் பானை 
ஓடுகள் கிடைத்திருப்பதால் அக்கால ரோமப் பேரரசுடன் தமிழர்கள் வைத்திருந்த வணிகத் தொடர்பு  ஆகியவை மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.
கீழடியில் இப்போது நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் இரட்டை கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் நாகரிகம், கட்டடக்கலை போன்றவை குறித்த புதிய உண்மைகளை  வெளிக்கொண்டு வரும். இவை தமிழர்களின் பெருமையை மேலும் உயர்த்தும். 
எனவே, மத்திய அரசிடம் வலியுறுத்தி கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளையும், ஆதிச்சநல்லூரில் 15 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் உள்ள ஆய்வுகளின் முடிவுகளையும் வெளியிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடியில் சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம் அமைத்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com