கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழர்களின் நாகரிகத்தை சொல்லும் கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளா
கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்


தமிழர்களின் நாகரிகத்தை சொல்லும் கீழடியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
இந்த அரிய தருணத்தில்  கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர்  த.உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு, பகல் பாராது உழைத்த அனைவருக்கும், முதன்முதலில் இது குறித்து நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசனுக்கும் வாழ்த்துகள்.
  அடுத்த கட்டமாக கீழடிக்கும் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்படும். 
ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்று, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தருணத்தில் கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சனோவ்லி என்ற இடம் உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசால் தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தோண்டப்பட்ட கீழடி அகழாய்வு இடமும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும்.
கீழடி ஆய்வுகளில் பல்வேறு அரிய - தொன்மை வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போதுள்ள தொல்லியல் துறை சென்னை வட்ட அலுவலகத்தைப் பிரித்து, தென் தமிழகத்துக்கு என்று மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு  ஓர்  அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும்.
இது, தென் தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதற்கும், மேலும் பல தொல்லியல் அகழ்வை முன்னெடுத்துச் செல்லவும் அடிப்படையாக அமையும்.
கீழடியோடு அகழாய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் நகரில்,  சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போலவே கீழடியிலும் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com