விக்கிரவாண்டியில் திமுக, நான்குனேரியில் காங். போட்டி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவும், நான்குனேரியில்  காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார்.
விக்கிரவாண்டியில் திமுக, நான்குனேரியில் காங். போட்டி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவும், நான்குனேரியில்  காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த ராதாமணி காலமானதாலும், நான்குனேரி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகிவிட்டதாலும் அந்த இரண்டு தொகுதிகளும் காலியாக இருந்து வந்தன. இந்த நிலையில் இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்  சனிக்கிழமை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர், அண்ணா  அறிவாலயத்துக்கு வந்தனர். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் விக்கிரவாண்டி , நான்குனேரி  மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முன்னோடிகளுடன் கலந்து பேசினோம். அந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் எனக் கேட்கிறீர்கள். விருப்பமனு திங்கள்கிழமை பெறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா எனக் கேட்கிறீர்கள். இப்போதுதான் தேர்தல் அறிவித்துள்ளார்கள். அதனால், கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும் என்றார்.
கே.எஸ்.அழகிரி: செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:
நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எங்கள் கூட்டணியில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காங்கிரஸார் திங்கள்கிழமை முதல் விருப்ப மனு அளிக்கலாம். கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மகத்தான வெற்றியைப் பெறுவோம் என்றார்.
வேட்பாளர் அறிவிப்பு: விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்பும் திமுகவினர்  வரும் 23-ஆம் தேதி காலை 10 மணியளவில் இருந்து  மாலை 6 மணிவரை அறிவாலயத்தில் மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். வேட்பாளர் நேர்காணல் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இது முடிவடைந்ததும்  விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை  மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு: திமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com