நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல் 

நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. ஆளும்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்கும் நிகழ்வு, சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரி சுமார் 90 பேர் வரை விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 5 பேர் வரை விருப்ப மனு அளித்திருந்தனர்.

இடைத் தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் திங்கள்கிழமை மாலை நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நேர்காணலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் நடத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவானது நேர்காணலை நடத்தியது.

மாலை 4 மணிக்குத் தொடங்கிய நேர்காணல், இரவு 7.30 மணி வரை நடந்தது. நேர்காணலை முடித்த பின் வெளியே வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, வேட்பாளரை இறுதி செய்யவில்லை என்றார்.

இந்நிலையில் நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை  காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com