2025-க்குள் தென்னை நார்ப் பொருள் வர்த்தகத்தை ரூ.35 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

தென்னை நார்ப் பொருள்கள் ஏற்றுமதியை 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.10 ஆயிரம் கோடியாகவும்,  உள்நாட்டு வர்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடியாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு, நடுத்தரத்
2025-க்குள் தென்னை நார்ப் பொருள் வர்த்தகத்தை ரூ.35 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

தென்னை நார்ப் பொருள்கள் ஏற்றுமதியை 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.10 ஆயிரம் கோடியாகவும்,  உள்நாட்டு வர்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடியாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். 

மத்திய தென்னை நார் வாரியம் சார்பில் தமிழகம், கேரளம், கர்நாடகம், குஜராத், ஆந்திர மாநிலங்கள், அந்தமான்- நிகோபர் தீவுக்குட்பட்ட 15 இடங்களில் ரூ. 60 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் தென்னை நார் தொழில் குழுமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவற்றின் தொடக்க விழா, புதிய  9 தென்னை நார் உற்பத்திப் பொருள்களின் அறிமுக விழா ஆகியவை வேலூரில் தனியார் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய தொழில் குழுமங்களைத் தொடக்கி வைத்து பேசியது: 

நாடு முழுவதும் 40 இடங்களில் ரூ.141 கோடியில் தென்னை நார் தொழில் குழுமங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.116.62 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. 

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 15 இடங்களில் தென்னை நார்த் தொழில் குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொழில் குழுமங்களால் அந்தந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். இந்த தொழில் குழுமங்களில் இணைந்து தென்னை நார்ப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர் உற்பத்தியைத் தரமானதாக மேற்கொள்ள வேண்டும்.  

அப்போது சர்வதேச அளவில் அவற்றின் மதிப்பு உயர்வதுடன், உரிய விலையும் நிலையான சந்தை வாய்ப்பும் கிடைக்கும். இது தொழில் முனைவோரை மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். 

இந்திய அரசு விவசாயம், ஊரகம், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளை மேம்படுத்திட முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுதொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இந்த அரசு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும். 

மேலும், தற்போது தென்னை நார்களைப் பயன்படுத்தி சாலை அமைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதனை செயல்படுத்துவது தொடர்பாக வேளாண்மை, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னை நார் உற்பத்திப் பொருள்கள் வர்த்தகம் ரூ. ஆயிரம் கோடியில் இருந்து ரூ.2500 கோடியாக உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் 112 நாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.10 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு வர்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடியாகவும் உயர்த்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு இதுபோன்ற தொழில் குழுமங்களின் பங்களிப்பு அவசியமாகிறது என்றார் அவர்.

தொடர்ந்து, சிறந்த தென்னை நார்ப் பொருள்கள் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நிறுவனத்தின் கூடுதல் செயலர் ராம்மோகன் மிஸ்ரா அறிமுக உரையாற்றினார். மத்திய தென்னை நார் வாரியச் செயலர் குமாரராஜா வரவேற்றார். இதில், மத்திய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், வேலூர் எம்எல்ஏ பா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com