கேரளம்- தமிழகம் நதிநீர்ப் பங்கீடு:  இரண்டு மாதங்களில் தீர்வு

கேரளம், தமிழகம்  நதிநீர்ப் பங்கீட்டுக்கு  இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று   முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமைத் தொடக்கி வைத்து பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், ஆட்சியர்  சி.அ.ராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம
சேலம் நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமைத் தொடக்கி வைத்து பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், ஆட்சியர்  சி.அ.ராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம

கேரளம், தமிழகம்  நதிநீர்ப் பங்கீட்டுக்கு  இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று   முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் வீரபாண்டி தொகுதிக்குள்பட்ட நெய்க்காரப்பட்டியில் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

மக்களுக்குப் பயனில்லாத ஆட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சியினரும்  குறை கூறி வருகின்றனர்.  அவர்களுக்கு நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டத்தின் மூலம் பதிலளித்து வருகிறேன்.

பருவமழைக்  காலங்களில் பெய்யும் மழை நீரைச் சேகரிக்கும் வகையில் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுப்பணித் துறையின் கீழ் 14 ஆயிரம் ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களில் 26 ஆயிரம் ஏரிகளும் என மொத்தம் 40 ஆயிரம் ஏரிகளையும் ஒரே நேரத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் தூர்வார முடியாது.  எனவே, படிப்படியாக நிதி ஒதுக்கி ஏரிகளைத் தூர்வாரி வருகிறோம்.

ஏற்கெனவே, முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு திரும்பிய போது,  அடுத்து நீர்ப்பாசன முறைகளை அறிய இஸ்ரேல் செல்வதாகத் தெரிவித்தேன். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரியில் வீணாகும் உபரி நீரை சேமிக்காத முதல்வர், இஸ்ரேல் சென்று பார்வையிடப் போகிறார் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணைகளைக் கட்டியது?  எதையும் செய்யவில்லை. எங்களை விமர்சிக்கத்  தகுதியோ,அருகதையோ திமுகவுக்கு இல்லை. மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை ஒரு தடுப்பணையைக்கூட திமுக கட்டவில்லை.

நீர் மேலாண்மை திட்டங்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். மூன்று தலைமைப் பொறியாளர்கள்,  இரண்டு கண்காணிப்புப் பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து,  உபரி நீரைத் தேக்கி வைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். 

தற்போது கொள்ளிடம் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலத்தில் தடுப்பணை கட்டும் பணி 20 சதவீதம் முடிந்திருக்கிறது. மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எந்தெந்த இடத்தில் தடுப்பணை கட்டுவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.  

கரூர் அருகே தடுப்பணை, அடுத்து கரூர் புகளூர் அருகே தடுப்பணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  அங்கு 1 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் வகையில் விரைவில் தடுப்பணை கட்டப்படும். இன்னும் 4 மாதங்களில் ஒப்பந்தம் போடப்பட்டு, தடுப்பணை கட்டும் பணி தொடங்கும்.

காவிரியின் குறுக்கே மூன்று முதல் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  எனவே,  காவிரி நீரை வீணாகக் கடலில் கலக்கவிட்டது எந்த அரசு என்பதை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். அதேபோல,  ஓடைகளில் தடுப்பணை கட்ட ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில்,  தற்போது வரை ரூ.600 கோடி வரை நிதி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டத்துக்கு முன்னுரிமை தரும் அரசாக உள்ளோம்.  

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,  15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் என்ற முறையில் கேரளம் சென்று அந்த மாநில முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். நதிநீர்த் திட்டங்களுக்குத் தீர்வு காணும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக அதிக காலம் இருந்தவர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்.  காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணாதவர்.  

இந்த அரசு செயல்படுவது போல காட்டுவதற்காக கேரளம் சென்று முதல்வரைச் சந்தித்தார் என்ற தோரணையில் கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். 

தமிழகம்-கேரளம் இடையேயான நதிநீர்த்  திட்டப் பிரச்னைகளுக்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  

இந்தக் குழு சந்தித்துப் பேசி இரு மாநிலப் பிரச்னைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும்.  இரண்டு மாதங்களில் பிரச்னைக்குத் தீர்வு கண்டு,  அதற்கடுத்து அனைத்து நதிநீர்த் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

ஆனைமலையாறு திட்டம் குறித்தும் கேரள முதல்வரிடம் பேசி இருக்கிறோம். குழுவின் மூலமாக விசாரிக்கப்பட்டு ஒரு முடிவு காணப்படும்.  எனவே, இரு மாநில முதல்வர்கள் சந்தித்துப் பேசும்போதுதான் நல்ல தீர்வு எட்டப்படும் என்ற அடிப்படையில் சந்தித்துப் பேசியிருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com