மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்: விரைவில் தொடக்கம்

மேட்டூர் அணை உபரி நீரை 4 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை ரூ. 565 கோடியில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக  முதல்வர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் பழனிசாமி
Updated on
1 min read

மேட்டூர் அணை உபரி நீரை 4 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை ரூ. 565 கோடியில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக  முதல்வர் தெரிவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், சங்ககிரி வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில், முதியோர் உதவித் தொகை கோரி 4,054 பேர் மனுக்கள் பெறப்பட்டன. 
இதில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: 
குடிமராமத்துத் திட்டத்தை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் அந்தப் பணி இன்றைக்கு சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.  மேட்டூர் அணை பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. 
மேட்டூர் அணையின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும், பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும்,  உபரியாக வெளியேறும் நீரையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே 83 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்டுள்ளது. 
மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின்  கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 100 ஏரிகளில் மேட்டூர் அணையின் உபரி நீரை நிரப்பும் திட்டத்தை ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளன. இப்பணிக்கு இன்னும் 5 மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.
இத் திட்டம் ஒரு வருடத்திலேயே நிறைவு பெற்று, 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் விவசாயத்துக்குத் தேவையான நீர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீரும் கிடைக்கும். நீர் மேலாண்மையை விவசாயிகளுக்கு சிறப்பாகச் செய்து தர வேண்டும் என்பதுதான் இந்த அரசின்  நோக்கம் ஆகும்.  
அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், அத்தனை தடைகளையும் தகர்ந்தெறிந்து விவசாயப் பெருமக்களுடைய நலன் காக்கும் அரசாக இந்த அரசு அமையும் என்றார் முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com