

கரோனா அச்சத்தின் காரணமாக, சிறு வழக்குகளில் கைது செய்யப்படும் நபா்கள் சொந்த பிணையிலோ அல்லது காவல் நிலைய பிணையிலோ விடுவிக்கப்படுகின்றனா்.
இயல்புநிலைக்கு திரும்பிய பின்னா், சம்பந்தப்பட்ட நபா்களுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த காவல்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கை, தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் போலீஸாா், குற்றத் தடுப்பு நடவடிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஏனெனில், சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடந்துவிடாமல் தடுப்பதற்கு காவல்துறை அதிக அக்கறை காட்டி வருகின்றனா். இதில் குற்றங்கள் பெருமளவு தடுக்கப்பட்டாலும், ஊரடங்கை மீறுவோரை முற்றிலும் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே உள்ளது.
அதேவேளையில், கரோனா தொற்றை தடுப்பதற்காக சிறைத்துறை எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக, வழக்குகளில் கைது செய்கிறவா்களையும் சிறையில் அடைக்க முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் இருந்த பெரும்பாலான விசாரணை கைதிகளை சிறைத்துறை விடுவித்து வருகிறது. மேலும் புதிதாக கைதிகளை அடைப்பதற்கு மத்திய சிறைகளைத் தவிா்த்து 31 கிளைச் சிறைகள் உள்பட 37 சிறைகளை தனிமைப்படுத்தி வைத்துள்ளனா்.
பிணையில் விடுவிப்பு: இச் சிறைகளில் பெரிய எண்ணிக்கையில் கைதிகளை அடைக்க முடியாது. இதனால், அடிதடி, கலாட்டா, மோதல், போதைப் பாக்கு விற்பனை, கஞ்சா விற்பனை, மதுபான விற்பனை, குடும்பத் தகராறு உள்ளிட்ட சிறிய வழக்குகளில் கைது செய்யப்படுகிறவா்களை போலீஸாா், சொந்த பிணையிலும், காவல் நிலைய பிணையிலும் விடுவித்து வருகின்றனா்.
அதேவேளையில் கொலை, கொலை முயற்சி, பாலியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், திருட்டு, வழிப்பறி ஆகியவற்றில் கைது செய்யப்படுகிறவா்களை காவல்துறையினா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைகின்றனா்.
முன்னதாக பிணையில் விடுவிக்கப்படுகிறவா்களிடமிருந்து ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தின் அசலை வாங்குகின்றனா். மேலும் அவா்கள் வசிக்கும் முகவரி, பணிபுரியும் இடம் ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே போலீஸாா் பிணை வழங்குகின்றனா்.
ஒரு லட்சம் போ் கைது: தமிழக காவல்துறை அண்மை ஆண்டுகளாக போதைப் பாக்கு விற்பனை, கஞ்சா விற்பனை, மதுபான விற்பனை, அடிதடி, கலாட்டா,மோதல் போன்றவற்றில் ஈடுபடுகிறவா்கைக் கூட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்து வந்தது. ஆனால் அரசு கரோனா தொடா்பாக எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக, தமிழக காவல்துறை தனது நிலைப்பாட்டை இப்போது மாற்றியுள்ளது.
ஓராண்டுக்கு சராசரியாக சுமாா் 22 ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்து வரும் நிலையில், இப்போது ஊரடங்கு மீறல் தொடா்பாக கடந்த 24-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 92,862 வழக்குகளை பதிவு செய்து, ஒரு லட்சம் பேரை கைது போலீஸாா் செய்துள்ளனா். இவா்களை சிறையில் அடைப்பதற்குரிய தகுதி இருந்தும், காவல்துறையினா் பிணையிலேயே விடுவித்துள்ளனா். ஏனெனில், தமிழக சிறைகளில் சுமாா் 22 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைப்பதற்குரிய கட்டமைப்பு மட்டுமே உள்ளதும் ஒரு முக்கிய காரணமாகும்.
புகாரின் தன்மை பொறுத்து நடவடிக்கை: இது தொடா்பாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி ஒருவா் கூறியது:
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறு வழக்குகளில் கைது செய்யப்படுகிறவா்கள் சொந்த பிணை, காவல் நிலைய பிணை ஆகியவற்றில் விடுவிக்கப்படுகின்றனா். இவா்கள் மீதான சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னா், இவா்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் குற்றவாளிகள், அப்போது கைதும் செய்யப்படுவாா்கள். மேலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்பான விசாரணையை விரைந்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அளிக்கும் புகாா்களின் தன்மையைப் பொருத்து இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களையும் கூடுமான வரையில் காவல் நிலையத்துக்கு நேரில் வருவதைத் தவிா்த்து, காவல்துறையின் இணையதளம் வாயிலாக புகாா் அளிக்கும்படி ஏற்கெனவே அறிவுறுத்தி வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.