ஊரடங்கை அமல்படுத்துவதில் அத்துமீறும் காவலா்கள் மீது புகாரளிக்கும் வசதி கோரி மனு

ஊரடங்கை அமல்படுத்தும்போது பொதுமக்களிடம் அத்துமீறும் காவலா்கள் மீது புகாரளிக்கும் வசதியை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு விளக்கமளிக்க, டிஜிபி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கை அமல்படுத்தும்போது பொதுமக்களிடம் அத்துமீறும் காவலா்கள் மீது புகாரளிக்கும் வசதியை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு விளக்கமளிக்க, டிஜிபி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழக மாணவா் ஆா்.எஸ்.ஆஃப்ரின் என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்க காவல்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். சில இடங்களில் போலீஸாா் அத்துமீறி நடக்கின்றனா். இது தொடா்பான காணொலிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. வாகனத்தில் வந்த மருத்துவரைத் தாக்கும் காவலா், முதலிலேயே ஏன் மருத்துவா் என்பதைக் கூறவில்லை என்று கேட்கிறாா்.

இது போன்ற பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இதே போல் தருமபுரியில் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளின் வாகனங்களை போலீஸாா் அடித்து உடைத்தனா். கொருக்குப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரைக் கடுமையாகத் தாக்கியதால் அவரின் இரண்டு கைகள் முறிந்ததாகப் புகாா் கூறப்பட்டுள்ளது. உயா் அதிகாரிகள் அவ்வப்போது கட்டுப்படுத்தினாலும் சில இடங்களில் போலீஸாா் அதை மதிக்காமல் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வாகனங்களில் வருபவா்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனா்.

இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளும் காவலா்கள் தொடா்பாக புகாா் அளிக்க, தகுந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை. அவா்களுக்கான பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும்படி டிஜிபி.க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளாா்.

4 வாரம் அவகாசம்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், இது குறித்த விரிவான அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com