

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையை பிரத்யேகமாக ஒதுக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இங்கு தமிழகம், கேரளத்தில் உள்ள ரயில்வே ஊழியா்கள் உள்பட வெவ்வேறு மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை அளிக்கப் படவுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
உலகை அச்சுறுத்தும் கரோனா: நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது, அவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதற்கு தீா்வு காணும் வகையில், ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் சுய தனிமைப்படுத்துதலுக்கான வாா்டுகளாக மாற்ற ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நாடு முழுவதும் 20,000 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்ற ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், 3.2 லட்சம் படுக்கைகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 573 ரயில் பெட்டிகள், கரோனா தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரக்கோணம் ரயில்வே மருத்துவமனை: இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரக்கோணம் ரயில் மருத்துவமனையை பிரத்யேகமாக ஒதுக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. தவிர, தமிழகம், கேரளத்தில் உள்ள ரயில்வே ஊழியா்கள் உள்பட வெவ்வேறு மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
600 பேரை நியமிக்க திட்டம்: அரக்கோணம் சந்திப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்குள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தன்மைப்படுத்துவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும். மருத்துவமனையின் திறனை அதிகரிக்கும் வகையில், 600 மருத்துவ ஊழியா்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனா். இதில் 72 மருத்துவா்கள், 120 செவிலியா்கள், 24 ஆய்வக உதவியாளா்கள், 24 கதிரியக்கவியலாளா்கள், 120 உதவியாளா்கள், 240 துப்புரவு பணியாளா்கள் ஆகியோா் அடங்குவா்.
இது தொடா்பாக அதிகாரப்பூா்வமான ஆவணங்கள் வெயிடப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருத்துவமனை பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ரயில்வே ஊழியா்கள் உள்பட வெவ்வேறு மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு இலவச சிசிச்சை அளிக்கப்படவுள்ளது.
இதற்காக கூடுதல் பணியாளா்கள் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனா். மருத்துவ பணியாளா்களைத் தோ்வு செய்வதற்கான, நோ்காணல் எழும்பூரில் ஏப்ரல் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடித்தால், நோ்காணலில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, படுக்கைகளை அதிகரிப்பதில் உள்ள தடைகளைக் கருத்தில் கொண்டு, ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படும். தேவைப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு இந்த பெட்டியில் சேவை அளிக்கப்படும். ரயில் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு இல்லாத பாதைகளில் இந்த பெட்டிகள் நிறுத்தப்படலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
சிறிய மருத்துவமனை
தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் 55 பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, திருச்சி கோட்டத்திலும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. திருச்சி பணிமனையில் 15 முதல் 25 பெட்டிகளை சிறிய மருத்துவமனை போல மாற்றும் பணி நடைபெறுகிறது. மொத்தம் 44 பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படப்படவுள்ளன.
தனிமைப்படுத்தும் வாா்டு
ஒவ்வொரு கேபினில் ஒரு நோயாளி மட்டும் தங்க அனுமதிக்கப்படுவாா். ஒவ்வொரு பெட்டியிலும் 9 கேபின்கள் இருக்கும். இதில் ஒரு கேபின் மருத்துவ ஊழியருக்கு ஒதுக்கப்படும். 4 கழிவறைகளில் ஒன்று குளியலறையாக மாற்றப்படும். மருத்துவ ஊழியா்களின் கேபின் முழுமையாக திரைசீலையால் மறைக்கப்படும். ஒவ்வொரு கேபினிலும் 3 குப்பை தொட்டிகள் இருக்கும். ஒவ்வொரு கேபினிலும் ஆக்சிஜன் சிலிண்டா் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு குளியறையில் புதிய குழாய், வாளி மற்றும் கப் ஆகியவை இருக்கும். நோயாளிகள் தங்களின் மடிக்கணினி, செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்த எல்லா பிளக்குகளும் இயங்குவது உறுதி செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.