மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுமா? ஏப்ரல் 14-க்குப் பிறகு முடிவு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடத்தப்படுமா என்பது குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட உள்ளது.  
மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுமா? ஏப்ரல் 14-க்குப் பிறகு முடிவு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடத்தப்படுமா என்பது குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட உள்ளது.  

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது.சித்திரை திருவிழாவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் திருத்தேரோட்டம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவை மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகும். இந்த நிகழ்ச்சிகளின்போது மதுரையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். சித்திரைத் திருவிழாவில் ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் திரண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை தரிசிப்பது வழக்கம். 

இதனால் சித்திரை திருவிழாவின்போது மதுரை நகர் மற்றும் அழகர் கோவில் பகுதிகள் திருவிழா கோலத்துடன் காணப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மே நாலாம் தேதி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 7ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் சுற்று எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. 

இதனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அடைக்கப்பட்டு சில அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்கும் காலமுறை பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் சித்திரை திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் சித்திரை திருவிழா தள்ளி வைக்கப்படும் என்று ஒரு கருத்தும் சித்திரைத் திருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி ஆகமவிதிப்படி சம்பிரதாயமாக நடத்தப்படும் என்று மற்றொரு கருத்தும் நிலவி வருகிறது. 

இது தொடர்பாக திருக்கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் தமிழகத்தில் தடை உத்தரவும் உள்ளது. தடை விலக்கிக் கொள்ளப் பட்டாலும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது கரோனா தொற்றை  அதிகரித்துவிடும்  அபாயமும் உள்ளது. மேலும் இது போன்ற சூழல் இதுவரை ஏற்பட்டது கிடையாது. மீனாட்சிஅம்மன்கோவில் வரலாற்றில் சித்திரை திருவிழாவை தள்ளி வைத்ததோ ,நடத்த முடியாமல் போனதோ இதுவரை நிகழ்ந்தது இல்லை. 

இது தொடர்பாக திருக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கும் தெரியவில்லை. எனவே சித்திரை திருவிழாவை தள்ளி வைப்பதா, அல்லது ஆகமவிதிப்படி பொதுமக்கள் பங்கேற்று நடத்தி முடிப்பதா என்பது தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம்,பட்டர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் சித்திரை திருவிழா தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். தற்போது வரை சித்திரை திருவிழா தொடர்பாக எந்த ஒரு முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com