16 தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பது ஆபத்தானது: அன்புமணி

உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான தொழிற்சாலைகளை இயக்க விதிவிலக்கு அளிப்பது ஆபத்தானது

சென்னை: உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான தொழிற்சாலைகளை இயக்க விதிவிலக்கு அளிப்பது ஆபத்தானது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய உள்துறை செயலாளா் அஜய்குமாா் பல்லாவுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலா் குருபிரசாத் மகோபாத்ரா கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களின் கைகளில் பணம் புழங்குவதை உறுதி செய்யவும் உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான தொழிற்சாலைகளை இயக்க வசதியாக ஊரடங்கு ஆணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாா்.

தொழில் மற்றும் வணிகம் சாா்ந்த பெரும்பான்மையான கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்றும் யோசனை வழங்கியுள்ளாா். இவை தவறான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகத் தவறான யோசனைகள் ஆகும். இந்தக் கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை பாராட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதேநேரத்தில் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, கரோனா நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, கட்டுப்பாடுகள் தளா்த்தப் பட்டால், கொடூரமான நோய்த்தொற்று மீண்டும் துளித்தெழும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

எனவே, உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர மீதமுள்ள எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com