சித்திரை விஷு ரத்தால் வெறிச்சோடிய பாபநாசம்

பாபநாசம் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சித்திரை விஷு..
சித்திரை விஷூவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய பாபநாசம்
சித்திரை விஷூவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய பாபநாசம்
Published on
Updated on
1 min read

அம்பாசமுத்திரம்: பாபநாசம் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் சித்திரை விஷு ரத்து செய்யப்பட்டதால் பாபநாசம் வெறிச்சோடி காணப்பட்டது. 

தென்மாவட்டங்களில் உள்ள சிவ தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது பாபநாசம் சிவன் கோயில் ஆகும். சிவன் பார்வதி திருமணத்திற்கு அனைத்துத் தேவர்களும் வடபுலத்தில் கூடியதால் பூமி வடபகுதி தாழத் தொடங்கியதையடுத்து அதைச் சமன் செய்யும் பொருட்டு அகத்தியரைத் தென்பகுதிக்குச் செல்லுமாறு கூறினார்.

அதற்கு தங்கள் திருமணக் கோலத்தைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று அகஸ்தியர் கூறியதற்குச் சிவபெருமான் சித்திரை மாதப் பிறப்பன்று திருமணக்கோலத்தில் காட்சி தருவோம் என்று கூறி அதன்படி சித்திரை முதல் நாள் அகஸ்தியருக்குப் பாபநாசத்தில் சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் திருமணக்கோலத்தில் காட்சியளித்தனர் என்பது புராண வரலாறு. 

இதையடுத்து ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளன்று சிவன் பார்வதி திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்குக் காட்சியளிப்பதை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வர். மேலும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் தாமிரவருணியில் புனித நீராடி பாபநாசம் கோயிலில் வழிபட்டுச் செல்வதுண்டு.

முன்னதாக பத்து நாள் பங்குனித் திருவிழா தொடங்கி பங்குனி இறுதி நாளில் சாமி அம்பாள் திருத்தேரில் பவனி வருவர். தொடர்ந்து சித்திரை முதல்நாள் அகஸ்தியருக்கு சாமி அம்பாள் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும். ஆண்டுதோறும் தடையில்லாமல் நடைபெற்று வந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2006ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டதால் திருமணக் காட்சி நடைபெறவில்லை. 

இந்நிலையில், நிகழாண்டு தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 16 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பங்குனித் திருவிழா நடைபெறவில்லை. சித்திரை விஷூவும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் பாபநாசம் பக்தர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோயிலில் சாமி அம்பாளுக்கு அன்றாட பூஜைகள் மட்டும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com