கடை விரித்தும் கொள்வாரில்லை: மலிந்த மீன்கள்

கடந்த 15 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச்சென்ற தேவி பட்டிணம் பகுதி மீனவர்கள் ஏராளமான
கடை விரித்தும் கொள்வாரில்லை: மலிந்த மீன்கள்
Updated on
2 min read

ராமநாதபுரம்: கடந்த 15 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச்சென்ற தேவி பட்டினம் பகுதி மீனவர்கள் ஏராளமான மீனைப் பிடித்தும் அதை வாங்க வியாபாரிகள் உள்ளிட்டோர் வராத காரணத்தால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு கடந்த ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்ட ஊரடங்கால் நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த இரு வாரங்களாக மீன்வளத்துறை தடையால் கடலுக்குச் செல்லவில்லை. 

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்து நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதித்து உள்ளது. அதனடிப்படையில் தேவி பட்டினம் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் கரை திரும்பினர்.

வழக்கமாக நாட்டுப்படகு மீனவர்களுக்குப் படகு ஒன்றுக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரையே மீன்கள் கிடைக்கும். ஆனால், இன்று கரை திரும்பிய 
மீனவர்களுக்கு 10 கிலோ முதல் 15 கிலோ வரையில் மீன்கள் கிடைத்திருந்தன. நண்டு பிடிப்பவர்களுக்கு வழக்கத்தைவிடக் கூடுதலாக 6 கிலோ வரை நண்டு
கிடைத்தன. 

அதிக பாடு (மீன்கள், நண்டுகள்) கிடைத்தும் வாங்குவதற்கு வெளியூர் வியாபாரிகள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் யாரும் வரவில்லை. இதனால் வீடுகள் முன்பு நண்டு, மீன்களை வைத்துக் கூவிக் கூவி விற்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால், மீன், நண்டுகளைப் பாதி விலைக்கே விற்க நேரிட்டதாக மீனவர் சிங்கராயர் தெரிவித்தார். 

தேவிபட்டிணத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நண்டு கிலோ ரூ.400 என விற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கிலோ ரூ. 200 என்ற அளவுக்கு விற்கப்பட்டது. பால வகை மீன்கள் மட்டும் கிலோ ரூ. 150க்கு அதிகமாக விற்கப்பட்ட நிலையில் ரூ.120 என விற்கப்பட்டது. இறால் மீன் கிலோ ரூ. 350 என விற்கப்பட்ட நிலையில், ரூ.300க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. 

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: நாட்டுப்படகில் குறைந்தது 6 கிலோ மீட்டர் வரை கடலில் சென்று மீன் பிடிக்கலாம். அதனடிப்படையில் ஒரு படகுக்கு ரூ. 500க்கு டீசல் நிரப்பிச்செல்வோம். படகுக்கு 2 பேர் அல்லது 3 பேர் மட்டுமே செல்வோம். ஆகவே டீசல் மற்றும் கூலியாள் எனக் குறைந்தது ரூ.1500 வரை செலவாகும். 

தற்போது பாடு (மீன், நண்டுகள்) அதிகம் கிடைத்தும் அவற்றை வாங்க ஆளில்லாததால் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் அந்தந்தத் தெருவிலேயே விற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், மீனவர்களே வாழும் தெருவில் எங்களுக்குள்ளேயே மீன்களை எப்படி வர்த்தகம் செய்ய முடியும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்வது நல்லது. ஆகவே மீனவர் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்கி வியாபாரிகளை சமூக இடைவெளியோடு வாங்க அனுமதிக்கவேண்டும் என்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com