மூன்று வண்ண அடையாள அட்டை சமூக வைரலை அதிகரிக்குமா?

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காக வழங்கப்பட்டுள்ள 3 வண்ண அடையாள..
மூன்று வண்ண அடையாள அட்டை சமூக வைரலை அதிகரிக்குமா?
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காக வழங்கப்பட்டுள்ள 3 வண்ண அடையாள அட்டைகளால், சமூக வைரல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகிறார்கள்.

கரோனா தொற்று நோய் உலகத்தையே உருட்டிக்கொண்டும், மிரட்டிக் கொண்டும், மக்களைச் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்துக் கொண்டிருக்கிறது. அரசும் 144 தடை உத்தரவும் போட்டு, பல வகைகளிலும் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கான வெளியே செல்வதற்கான அடையாள அட்டை என அச்சிட்டு மக்களிடத்தில், வாக்குச்சீட்டு வழங்குவது போல், குடும்பத்திற்கு ஒரு அட்டை என வழங்கப்பட்டுள்ளன. 

இந்த அட்டையில், பச்சை - திங்கள், வியாழன், நீளம் - செவ்வாய், வெள்ளி, சிவப்பு - புதன், சனி என அச்சிடப்பட்டு, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்லத்தக்கது. 15 வயதிற்கு மேல் 60 வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வெளியே வரலாம். ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என அச்சடிக்கப்பட்டு, கூத்தாநல்லூரில் 24 வார்டுகளிலும் நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சட்ட உரிமை பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளர் டி.பீர்முகம்மது கூறியது..

கரோனா ஊரடங்கால் அதிகமான பொதுமக்கள் வெளியில் போகக் கூடாது எனவும், மக்களைக் கட்டுப்படுத்தவும்தான் இந்த 3 வண்ண அட்டை வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நகராட்சி நிர்வாகம் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெளியில் வராமல், கரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரும் இணைந்து தனிமையைக் கடைப்பிடித்தால் தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம். சமீர் கூறியது..

பொதுமக்களுக்கு வழங்கியுள்ள 3 வித வண்ண அட்டை தேவையில்லாதது. மக்கள் அழகான முறையில் பிரிந்து சென்று தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர். குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாகும். கூட்டம் அதிகரிக்கும் போது, தர்மசங்கடமான நிலை ஏற்படும். உணவுப் பொருட்கள் இல்லாமல் விற்றுப் போகும். அட்டை இல்லாத நேரத்தில், தேவைப்படும் அத்தியாவசியப் பொருளை வாங்க வந்தால் பொருளும் இருக்காது. அந்த தேதியிட்ட அட்டையும் கிடையாது. 

குறிப்பிட்ட நாள் வரும் வரை குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்களும் சாப்பிடாமல் இருக்க முடியுமா. இத்திட்டத்தை உடனே நிறுத்தி விட்டு, பழைய மாதிரியான செயல்பாடே சிறந்தது. மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, பொருள்கள் வாங்கவில்லை என்றாலும் வெளியில் சுற்றித்திரிய ஒரு பாலமாக இந்த அட்டை அமைந்து விடுகிறது. ஒன்றரை மாதங்கள் வீட்டிற்குள் இருந்தவர்களும், வெளியில் பார்க்க வேண்டும், ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என வருவதற்கும் வசதியாக உள்ளது இந்த அடையாள அட்டை. சமூக வைரலை அதிகரிக்கும் அடையாள அட்டையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றார்.

சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் கூறியது..

கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டுகளிலும், 8 வார்டுக்கு ஒரு வண்ணம் என, 24 வார்டுகளுக்கும் 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. வாரத்தில் இரண்டு கிழமைகளில் குறிப்பிட்ட நபர் மட்டும் வெளியில் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரண்டு கிழமைகளிலும் அந்த 8 வார்டுகளைச் சேர்ந்த மக்கள்தான் வெளியே வருவார்கள்.

இதுவரை 24 வார்டுகளில் இருந்தும் மக்கள் வந்தனர். தற்போது இந்த அடையாள அட்டை வழங்கிய பிறகு, கூட்டம் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும், இத்திட்டம் கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்பட்டு, சிறப்புப் பெற்றுள்ளது. அதனால் தான் திருவாரூர் மாவட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com