

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கேரளத்தில் ஏலக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுடி நடைபெற்று வருகிறது. இதில் வண்டிப்பெரியாறு, பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை ஆகிய தாலுகாக்களில் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டா நிலங்களிலும், குத்தகை அடிப்படையிலும் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்திலிருந்து தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர்.
போக்குவரத்து தடை:
இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22}ம் தேதி முதல் தமிழகம்}கேரளம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சென்று வர அனுமதிக்கப்படவில்லை.
தற்போது, தேனி மாவட்டம் வழியாக பால், காய்கனிகள் மட்டும் கேரளத்திற்குக் கொண்டு செல்ல தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது.
விவசாயப் பணிகளில் சுணக்கம்:
தேனி மாவட்டத்திலிருந்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கேரளப் பகுதிகளுக்குச் சென்று வர அனுமதி இல்லாததால், ஏலக்காய் தோட்டங்களில் விவசாயப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது, நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகளின் தோட்டங்களில் மட்டும் கேரளத்தில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மூலம், விவசாயிகளின் மேற்பார்வையின்றி பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் தோட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளது. மேலும், இடுக்கி மாவட்டத்தில் மழையில்லாததால் ஏலக்காய் தோட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏலக்காய் செடிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதற்கு மோட்டார் பம்பு உபகரணங்களைக் கொண்டு சென்று நிறுவவும், பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பணப் பரிவர்த்தனை முடக்கம்:
ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரம் ஒருமுறை சம்பளம் பட்டுவாடா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வங்கிகள் மூடப்பட்டுள்ளதால், ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இதனால், கேரளத்தில் ஏலக்காய் சாகுடியில் ஈடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா?:
தற்போது, இடுக்கி மாவட்டத்தை கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள பச்சை நிற மண்டலமாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. அதே போல, தேனி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்படவில்லை. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் நலன் கருதி, தேனி மாவட்டம் ழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வர விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் விவசாயப் பணிகளுக்கு அரசு விலக்கு அளித்துள்ளதால், இப்பிரச்சனை குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி, ஏலக்காய் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்களைச் சுழற்சி முறையில் ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், உரம் பயிர் பாதுகாப்பு மருந்துகள், மோட்டார் உபகரணங்கள் வாங்குவதற்கும் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு வங்கிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.