

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தமிழக மின் வாரியம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
அதில், கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தமிழக முதல்வரிடம் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் கதவடைப்பு மற்றும் மின் உபயோகமின்மை காரணத்தால் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்துவதென்பது தற்போதைய மின்நுகர்வின் அடிப்படையில் எழும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது என முறையிட்டனர்.
தமிழக முதலமைச்சர் இந்த முறையீட்டினை பரிசீலித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கியதின்பேரில், அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்களின் மின்கட்டணத்தை கீழ்கண்ட முறையில் திருத்தியமைக்க உத்தரவிட்டுள்ளார்:
அ) தாழ்வழுத்த (எல்டி/எல்டிசிடி) தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்கள் தங்களது மின்னிணைப்பு மின் அளவியிலுள்ள மின் அளவீட்டினை குறுஞ்செய்தி/வாட்ஸ்ஆப்/மின்னஞ்சல் மூலமாக எழுத்து அல்லது புகைப்பட வடிவில் அவரவர் இணைப்பிற்கு ஏற்றவாறு) தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளர் அவர்களுக்கு தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளர் அவர்களின் அலுவலக கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் விபரங்களை www.tangedco.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
ஆ) மேற்கண்ட மின் அளவீடு பெறப்பட்டவுடன் மின்கட்டணத்தினை திருத்தியமைத்து அதன் விபரங்களை பிரிவு அலுவலர்கள் நுகர்வோருக்கு மேற்கண்ட தகவல் பெறப்பட்ட முறையிலேயே (குறுஞ்செய்தி/வாட்ஸ்ஆப்/மின்னஞ்சல்) கணக்கீட்டு கட்டண விபரங்களை தெரிவிக்க வழிவகை செய்வர்.
இ) மேலும், தாழ்வழுத்த (எல்டி/எல்டிசிடி) பயனீட்டாளர்களுக்கு கட்டணம் செலுத்த ஏற்கனவே வழங்கியுள்ள இணையதளவழிகளான வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின்பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட கணக்கீடு முறைகள் தாழ்வழுத்த வீடு மற்றும் பிற மின்நுகர்வோர்களுக்கு பொருந்தாது. மேலும், இது 03.05.2020 வரை மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.