விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை: காவிரி நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு விளக்கம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை: காவிரி நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு விளக்கம்
Published on
Updated on
1 min read


காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு தமிழக பொதுப்பணித் துறை விளக்கமளித்துள்ளது.

பொதுப்பணித் துறை விளக்கம்:

"தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்ட போராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

அதில் ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவேரி நடுவர் மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில் கொண்டுதான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவேரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது. 

மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொருதுறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ளவிதிகளுக்குதிருத்தங்கள்மேற்கொண்டுள்ளது.

இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவேரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.

மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும்  இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒருவழக்கமான நடைமுறையாகும்.  இதனால், காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவேரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com