மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கவச உடை தயாரிப்பு

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மருத்துவர்களைப் பாதுகாக்கும் முழு கவச உடைகள் தற்போது திருப்பூரில் 100க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 
மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கவச உடை தயாரிப்பு



திருப்பூர்: கரோனா நோய்த் தொற்றிலிருந்து மருத்துவர்களைப் பாதுகாக்கும் முழு கவச உடைகள் தற்போது திருப்பூரில் 100க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

பின்னலாடைத் தொழில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகத்தை திருப்பூர் ஈட்டிக் கொடுக்கிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 

 நாட்டின் பின்னலாடை வர்த்தகத்தில் 50 சதவீதம் திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பின்னலாடைகளுக்கு  ரூ. 6 ஆயிரம் கோடி  வரவேண்டியுள்ளது. அதேபோல், ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன. மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 25 நாள்களில் மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பிரச்னையால்   திருப்பூரில் பின்னலாடைத் துறையில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.  

முழுவீச்சில் தயாராகும் மருத்துவப் பாதுகாப்பு உடைகள்:   உள்நாட்டு மருத்துவர்கள், செவிலியர் அணியும் வகையில் முகக் கவசம், முழு உடல் பாதுகாப்புக் கவசம் (பிபிஇ கிட்) உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது திருப்பூரில் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. இதில், திருப்பூர், செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ""நான் வோவன்'' துணிகளில் 8,500  முழு உடல் பாதுகாப்புக் கவசம் உற்பத்தி செய்து அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், தற்போது திருப்பூரில் இருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இடைத்தரகர்கள் மூலமாக மருத்துவர்களுக்கான முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து மருத்துவ பாதுகாப்புக் கவச உடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எஸ்.எஸ்.லோகநாதன் கூறியதாவது: 
திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகளை உற்பத்தி செய்து கொடுக்க நிறைய விசாரணைகள் வரத் தொடங்கியுள்ளன. எனினும் தற்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமே ""நான் வோவன்'' துணிகளை வாங்கிக் கொடுக்கின்றன. அந்தத் துணிகளை வெட்டி தைத்துக் கொடுப்பதுடன், 3 அடுக்கு முகக் கவசம் மற்றும் கையுறைகளை வெளியில் இருந்து வாங்கி, ஆர்டர் கொடுக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம். 

சீனா உள்ளிட்ட நாடுகளில் ""நான் வோவனில்'' மற்றொரு வகையான  ""ஸ்பன் பவுண்டு பாலிபுரோபிலீன்'' அல்லது ""எஸ்எம்எம்எஸ்'' எனப்படும் துணிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துவக் கவச உடைகள் பாதுகாப்பானதாகவும், மருத்துவர் அணிவதற்கு ஏதுவாகவும் உள்ளன. தற்போது ""ஸ்பன் பவுண்டு பாலி புரோபிலீன்'' துணிகள் சென்னை, கொல்கத்தா, லூதியானா போன்ற இடங்களில் கிடைப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆகவே, அங்கிருந்து துணிகளை வரவழைத்து பாதுகாப்புக் கவச உடைகள் தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். 

மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்தால் மருத்துவர், செவிலியருக்கான பாதுகாப்புக் கவச உடைக்கான தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யலாம் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கரோனா பிரச்னையால் பெரிய பாதிப்பு ஏற்பட்ட நகரங்களில் திருப்பூரும் ஒன்றாகும். தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் மருத்துவப் பாதுகாப்புக் கவச உடைகள் உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனிடையே, 1.5 கோடி மருத்துவப் பாதுகாப்புக் கவச உடைகள் வாங்க சீனாவுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

இந்த உடைகள் தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. ஆகவே, இந்த அமைப்பு, பாதுகாப்புக் கவச உடை தைக்கும் பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டுத் தேவைக்கு திருப்பூரில் இருந்தே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதன் மூலமாக நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதுடன், வேலை இழப்பை சரிகட்டவும்  ஒரு வாய்ப்பாகவும் அமையும். 

இது போக உலகச் சந்தைகளுக்கும் பாதுகாப்புக் கவச உடைகளை நம்மால் அனுப்பமுடிவதோடு, அந்நியச் செலாவணியையும் கணிசமான அளவு ஈட்ட முடியும். ஆகவே, மத்திய அரசு ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்து, திருப்பூர் தொழில் துறையினருக்கு மருத்துவப் பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிக்கத் தேவையான பயிற்சியையும், ஒத்துழைப்பையும் அளித்தால் சர்வதேச அளவில் நாம் தடம் பதிக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com