உடுமலை சங்கர் கொலை வழக்கு: குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டது,  ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது உள்ளிட்டவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சங்கரின் குடும்பத்தினர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டது,  ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது உள்ளிட்டவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சங்கரின் குடும்பத்தினர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கௌசல்யா. இவர்  தன்னுடன் படித்த உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 2016, மார்ச் 13}ஆம் தேதி உடுமலைப்பேட்டையில் சங்கர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கௌசல்யாவும் பலத்த காயமடைந்தார். இந்தக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட  6 பேருக்கு மரண தண்டனையும்,  ஸ்டீபன் தங்கராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்,  மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும்  விதித்து திருப்பூர் அமர்வு நீதிமன்றம் 2017-இல்  தீர்ப்பளித்தது.

 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. தண்டனையை எதிர்த்து சின்னச்சாமி உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.  வழக்கின் முதல் குற்றவாளியான சின்னச்சாமியை விடுதலை செய்தும், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுவை தாக்கல் செய்துள்ள வழக்குரைஞர் பிரீதிகா திவிவேதி கூறுகையில், "உடுமலைப்பேட்டை சங்கரின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியை விடுதலை செய்தும், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சங்கரின் சகோதரரர் விக்னேஷ்வரன் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com