தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் மதுரையா... திருச்சியா?

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
Updated on
3 min read

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

இதனிடையே  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்கக்கோரி முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும்,  இது தென்மாவட்ட மக்களின் ஓட்டுமொத்த விருப்பம் என தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கக்கோரி தற்போது கோரிக்கை வைத்துள்ளதாகவும்,  அரசியலுக்கும், கலையுலகிற்கும் தலைநகராக மதுரை இருந்து வருகிறது. 

மதுரையைச் சேர்ந்த இரு அமைச்சர்களின் கருத்துக்கு திருச்சியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. திருச்சியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் தமிழகத்தின் இன்னொரு தலைநகரம் என்றால் அது திருச்சிதான் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இரண்டாவது தலைநகர் என்றால் அது திருச்சிதான் என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு திருச்சியை இரண்டாவது தலைநகராக்குவோம் என்று அறிவிக்கும் கட்சிக்குஅதரவு அளிக்கப்படும் என கூறியுள்ளார். 

இதனிடையே திருச்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஜாதிச் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டக் குழு அமைக்கப்படும் அளவு நிலைமை பெரிதாக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெருகி வரும் மக்கள்தொகையால் சாலைகளில் தினமும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் இருந்து வந்து செல்லும் லட்சக்கணக்கானோா் பெரிதும் சிரமப்படுகின்றனா். இதைக் கருத்தில்கொண்டுதான் தனது ஆட்சிக் காலத்திலேயே எம்ஜிஆா் திருச்சியை இரண்டாம் தலைநகராக மாற்ற முடிவு செய்தாா்.

அவருக்குப் பிறகு இந்தக் கோரிக்கையை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். திருச்சி மாநகரமானது தமிழகத்தின் இதயம் போன்ற பகுதியாகும். கன்னியாகுமரி தொடங்கி மாநிலத்தின் நான்கு எல்லைகளில் இருந்தும் திருச்சிக்கு 4 மணி நேரத்தில் சாலை மாா்க்கமாகவே வந்து செல்ல முடியும்.

எனவே, சென்னையில் இனி அமையவுள்ள அரசின் பல்வேறு துறை தலைமை அலுவலகங்களை திருச்சியில் கட்டமைக்க வேண்டும்.

திருச்சியில் தலைநகருக்கான போதிய இட வசதி, தண்ணீா் வசதி, சாலை வசதி, விமானம், ரயில் போக்குவரத்து வசதி, கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவை தாரளமாக உள்ளன. துணை நகரத்துக்கு தேவையான நிலங்களையும் திருச்சி அருகிலேயே கையகப்படுத்த முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், பல்வேறு துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தி திருச்சிதான் இரண்டாம் தலைநகா் என்ற முடிவை எம்ஜிஆா் அறிவித்தாா். ஆனால், அவரது உடல்நிலை பாதிப்பால் இதை நிறைவேற்ற முடியாமல் போனது.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவை, கடலூா், திருநெல்வேலி,சேலம் உள்ளிட்ட அனைத்து நகரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். மதுரையில் உயா்நீதிமன்றக் கிளையும் உள்ளது. ஆனால், திருச்சிதான் தமிழகத்தின் மையப்பகுதி. அனைத்து மாவட்ட மக்களும் திருச்சிக்கு வந்து செல்வது மிக எளிது. அரசியல் காரணங்களுக்காக திருச்சியை ஒதுக்கிவிடாமல், பூகோள அமைப்பின் அடிப்படையில் மக்களின் வசதியை மனதில் கொண்டு திருச்சியை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும். தமிழக முதல்வா் இதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றஉ திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் வலியுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ கருத்துக்கு நேர்மாறாக கோரிக்கை விடுத்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். 

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா முகக் கவசம் வழங்கும் விழா திருச்சி அமராவதி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு முகக் கவசம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்டத்தில் உள்ள 1224 நியாய விலைக் கடைகளில் 8 லட்சத்து 14 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் 25 லட்சத்து 82 ஆயிரம் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 50 லட்சம் எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் தமிழக அரசால் விலை இன்றி வழங்கப்பட உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து  குடும்ப அட்டைதாரர்களுக்கும்  முகக்கவசம் வழங்கப்பட்டுவிடும்.

திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க  வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம்.

திருச்சியில் அனைத்து வளங்களும் உள்ளது. எம்.ஜி.ஆர் திருச்சியை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என விரும்பினார்.ஆனால் அப்போது உடல் நல குறைவு காரணமாக மறைந்து விட்டார்.அதனால் அந்த திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் என்கிற கோரிக்கை எழுந்தால் திருச்சியை தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

திருச்சியை இரண்டாவது  தலைநகராக அறிவிக்க வேண்டும். திருச்சியை இரண்டாவது  தலைநகராக அறிவிக்கவேண்டும் என்பது மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் கனவுத்திட்டம். முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் திருச்சியைதான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க முயற்சிப்போம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தலைநகர் விவகாரத்தில் அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com