வீரத்துடன் பணியாற்றும் காவலர்களின் பணி மகத்தானது: டிஜிபி திரிபாதி பெருமிதம்

திருநெல்வேலியில் காவல்துறை டிஜிபி திரிபாதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவலர் சுப்பிரமணியன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவலர் சுப்பிரமணியன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காவல்துறை டிஜிபி திரிபாதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், மேலமங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் துரைமுத்து (29). இவர், மீது இரட்டை கொலைவழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் துரைமுத்துவை தேடி வந்த நிலையில், மணக்கரை கிராமத்தில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு அறையில் துரைமுத்து பதுங்கியிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை காவலர்கள் அங்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். அப்போது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினாராம். இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணியன் (26) உயிரிழந்தார். துரைமுத்துவும் மற்றொரு குண்டு வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். 

குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போது வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பண்டாரவிளை பகுதியில் நல்லடக்கம்செய்யப்பட உள்ளது. இதில் பங்கேற்க தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி மதுரையில் இருந்து கார் மூலம் திருநெல்வேலி வந்தார். அவருக்கு, திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண்குமார் அபிநபு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு பண்டாரவிளைக்கு டிஜிபி புறப்பட்டுச் சென்றார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் டிஜிபி திரிபாதி கூறியது: நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, காவல்துறை சார்பிலும் உதவிகள் வழங்கப்படும். பணியின்போது காவல்துறையினர் உயிரிழந்தால் எந்தவித பாரபட்சமின்றி நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த காவலரின் உடலில் நாட்டு வெடிகுண்டுகளில் இருந்து வெளியேறிய ஆணிகள் பற்றி உடற்கூறு ஆய்வுக்குப் பின் தான் முழுமையான விபரம் தெரியவரும். மேலும் காவல் துறையினர் பாதுகாப்பிற்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் கொடுக்கப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோ ஓரிரு சம்பவங்களில் இவ்வாறு துரதிஷ்ட சம்பவம் நடைபெற்று விடுகிறது.

குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு கண்டுபிடித்து எதிர்தாக்குதல் செய்யும் வகையில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது . காவலர்கள் தங்களது உடல் நிலைகளையும், குடும்பங்களையும் பாராமல் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.வீரத்துடன் பணியாற்றும் காவலர்களின் பணி மகத்தானது. அவர்களை பற்றி யார் எது சொன்னாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com