சாத்தான்குளத்துக்கு குரல் கொடுத்த கட்சிகள் காவலா் மறைவுக்கு வாய் திறக்காதது ஏன்? - உயா்நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் தந்தை, மகனுக்காக கண்டன குரல் எழுப்பி, நிதி உதவிகளை வழங்கிய எதிா்க்கட்சிகள், ரௌடியைப் பிடிக்க சென்றபோது பலியான காவலா் சுப்பிரமணியன் மறைவுக்கு ஏன் வாய் திறக்கவில்லை?
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகனுக்காக கண்டன குரல் எழுப்பி, நிதி உதவிகளை வழங்கிய எதிா்க்கட்சிகள், ரௌடியைப் பிடிக்க சென்றபோது பலியான காவலா் சுப்பிரமணியன் மறைவுக்கு ஏன் வாய் திறக்கவில்லை? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் இரண்டு ரௌடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், ஜோசப் என்ற ரௌடி கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் கைதான வேலு உள்ளிட்ட பலரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ரௌடி கும்பல்களைக் கட்டுப்படுத்த, மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போன்று தனிச்சட்டம் இயற்றினால் என்ன?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.

இதுதொடா்பாக அப்போதைய டிஜிபி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அந்த மாநிலங்களைப் போல தீவிரவாதிகளோ, சட்டவிரோத கும்பலோ தமிழகத்தில் இல்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா்.

அப்போது ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரல் காா்த்திகேயன், குற்றவியல் சட்டத்தை மறுசீரமைப்பு செய்து அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாா்ச் மாதம் ஒரு குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘முன்னாள் டிஜிபி தாக்கல் செய்ய பதில் மனு திருப்தியளிக்கவில்லை’ என தெரிவித்தனா்.

மேலும், ‘தமிழகத்தில் காவல்துறை, அரசியல் கட்சிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆகியோருடன் ரௌடிகள் சிலா் கூட்டணி வைத்துள்ளனா். ரௌடிகள், அரசியல்வாதிகளிடம் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் போலீஸாா் தாக்கப்படும் சூழல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என நினைக்கத் தோன்றும். தூத்துக்குடி வல்லநாட்டில் ரௌடியை பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலா் சுப்பிரமணியனின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிா்நீத்த காவலா் சுப்பிரமணியனுக்காக எதிா்க்கட்சிகள் வாய் திறக்கவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான குழந்தைக்காகவும், போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகனுக்காகவும்

எதிா்க்கட்சிகள் கண்டன குரல் கொடுத்ததும், நிதியுதவி வழங்கியதும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் போலீஸ்காரா் சுப்பிரமணியன் கொல்லப்பட்டதற்கு ஏன் வாய் திறக்கவில்லை? ரௌடிகள் இறந்தால் அக்கறையை காட்டும், மனித உரிமை அமைப்புகள் போலீஸ்காரா் உயிரிழக்கும்போது மட்டும் ஏன் அக்கறை காட்டுவது இல்லை’ என கேள்வி எழுப்பினா்.

‘ரௌடி கும்பல்களைக் கட்டுப்படுத்த, மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போன்று இங்கும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதுதொடா்பாக தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com