

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன்: தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்த் குமார் காலமானார் என்பது பேரதிர்ச்சியும் பெருங்கவலையும் அளிக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பவர் எச்.வசந்தகுமார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு ஆகியவற்றின் அடையாளம். வெற்றிவீரருக்கு எமது வீரவணக்கம் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர்: எச். வசந்தகுமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இயற்கை எய்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், மன வருத்தமும் தருகிறது.
வசந்தகுமார் மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, எ.வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது துணைவியார், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சகோதரர் குமரிஅனந்தன் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: எச்.வசந்தகுமார் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். காங்கிரஸ் இயக்கமே தமது உயிர்மூச்சு என செயல்பட்டவர். உழைப்பால் உயரமுடியும் என்று வாழ்ந்துகாட்டிய சாதனையாளர். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். தொற்று காலத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்காக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். கொரோனா தொற்று தம்மையும் பாதிக்கும் என்பது குறித்து அச்சம் கொள்ளாமல் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன்: எச்.வசந்தகுமாரின் மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வசந்த் அண்டு கோ நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர். கரோனா குணமடைந்து வீடு திரும்புவார் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் என்பது தாங்கவொணாத் துயரமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.