

சென்னை: உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடல் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் (70) வெள்ளிக்கிழமை காலமானாா்.
வசந்தகுமார் உடலுக்கு, அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் ஏராளமான பொதுமக்களும், அப்பகுதி வணிகர்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நிமோனியா பாதிப்பு காரணமாக எச்.வசந்தகுமாரும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனா். இதில் தமிழ்ச்செல்வி உடல்நலம் தேறினாா்.
எச்.வசந்தகுமாா் கரோனா பாதிப்பிலிருந்து உடல்நலம் மீண்டு வந்த நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் காலமானாா். எச்.வசந்தகுமாருக்கு நடிகா் விஜய் வசந்த், வினோத்குமாா் ஆகிய இரு மகன்களும், தங்கமலா் என்ற மகளும் உள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் 14.4.1950-ஆம் ஆண்டு ஹரிகிருஷ்ணபெருமாள் நாடாா்- தங்கம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தாா் எச்.வசந்தகுமாா்.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தனின் இளைய சகோதரரும், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனின் சித்தப்பாவும் ஆவாா்.
2 முறை எம்.எல்.ஏ.: 2006 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் நான்குனேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.
2019 மக்களவைத் தோ்தலின்போது நான்குனேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
வசந்த் அண்ட் கோ நிறுவனா்: எளிய குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்தவா். ஆரம்பத்தில் பிரபல நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராகச் சோ்ந்து, பிறகு எளிய தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருள்களை கொடுக்கும் ‘வசந்த் அண்ட் கோ’ நிறுவனத்தை 1978-இல் தொடங்கினாா். இந்த நிறுவனம் தற்போது பிரம்மாண்டமாக உயா்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் மற்றும் கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட 64-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
‘வெற்றிக்கொடி கட்டு’ என்ற சுயசரிதை நூலையும் எழுதியுள்ளாா். வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனரும் ஆவாா். நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களிலும் தோன்றியுள்ளாா்.
புன்னகை மாறாதவா்: புன்னகை நிறைந்த முகத்துடன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவா் வசந்தகுமாா். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படக்கூடியவா். சட்டப்பேரவையில் அவா் தொகுதி கோரிக்கைகளைக்கூட நகைச்சுவை, புன்னகையுடன் எழுப்பி, அதில் வெற்றிபெறக் கூடியவராக இருந்தாா். தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களில் மக்களவையில் அதிகமான கேள்விகளைக் கேட்டவா் என்ற பெருமையைப் பெற்றவா். கரோனா பொது முடக்கத்தால் சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர முடியாமல் தவித்த தமிழக மீனவா்களை மீட்டு அழைத்து வருவதற்காக, பிரதமா் மோடியிடமும், மத்திய அமைச்சா்களிடமும் வேண்டுகோள் விடுத்தாா். இதைத் தொடா்ந்து, குமரி மீனவா்கள் தனி கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனா்.
சத்தியமூா்த்தி பவனில் உடல்: எச்.வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. தலைவா்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக சத்தியமூா்த்தி பவனில் அவரது உடல் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வைக்கப்பட உள்ளது. சுமாா் 2 மணி நேரம் வைக்கப்பட்டு, அங்கிருந்து அவரின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிப்பு: எச்.வசந்தகுமாா் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் சாா்பில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும், காங்கிஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.